புதுடில்லி : புதிய சி.பி.ஐ., இயக்குனர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, மே, 2ம் தேதிக்கு முன் கூட்டுவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞரான, பிரசாந்த் பூஷண், 'காமன் காஸ்' என்ற தொண்டு நிறுவனம் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:அனைத்து மாநில காவல் துறை தலைவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், சி.பி.ஐ., அமைப்புக்கு உள்ளது. இதன் இயக்குனரை, பிரதமர், பிரதான எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பிப்.2ல், சி.பி.ஐ., இயக்குனர், ஆர்.கே.சுக்லா ஓய்வு பெற்ற பின், அந்த பதவிக்கு, பிரவீன் சின்ஹா இடைக்கால இயக்குனராக, அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது, டில்லி சிறப்பு போலீஸ் சட்டத்தை மீறிய செயல். எனவே, உடனடியாக குழு கூட்டத்தை கூட்டி, முழு நேர சி.பி.ஐ., இயக்குனரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மே, 2ம் தேதிக்கு பின் குழு கூடி, சி.பி.ஐ., இயக்குனரை தேர்வு செய்யும் என, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி, எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, வரும், 23ல் ஓய்வு பெறுகிறார். அதன் பின், சி.பி.ஐ., இயக்குனரை தேர்வு செய்ய வசதியாக, மே, 2ம் தேதிக்கு பின் கூட்டம் நடத்துவதாக, மத்திய அரசு கூறுகிறது;

இதை ஏற்கக் கூடாது,'' என, பிரசாந்த் பூஷண் வாதாடினார். இதையடுத்து அமர்வு பிறப்பித்த உத்தரவு:பிரசாந்த் பூஷண் கூறுவதிலும் ஒரு கருத்து உள்ளது. மிக முக்கியமான சி.பி.ஐ., இயக்குனர் பதவிக்கு, இடைக்கால ஏற்பாடு கூடாது. அதனால், மே, 2க்கு முன்பாக குழுவை கூட்டி, சி.பி.ஐ., இயக்குனரை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE