கவுரி : ஜம்மு - காஷ்மீரின் செனாப் ஆற்றில் இருந்து 1178 அடி உயரத்தில் கட்டப்படும் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலத்தின் 'ஸ்டீல்' வளைவு அமைக்கும் பணி நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது.

ஜம்மு - காஷ்மீரின் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் தடத்தில் உள்ள செனாப் ஆற்றின் மேல் 1178 அடி உயரத்தில் 1486 கோடி ரூபாய் செலவில் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் அமைக்கும் பணியில் வடக்கு ரயில்வே ஈடுபட்டு வருகிறது.கட்டுமான துறையின் மிகப் பெரிய ஆச்சரியமாக கருதப்படும் இந்த ரயில் பாலம் ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 114 அடி அதிக உயரம் உடையது.மொத்தம் 1.3 கி.மீ. நீளம் உடைய இந்த ரயில் பாலம் கட்டுமான பணியில் இரு பக்கத்தில் இருந்து மிகப் பெரிய வளைவு ஏற்படுத்தும் பணி மிகவும் சவாலானதாக கருதப்பட்டது.
இதன் உச்சியில் இறுதிக் கட்ட 'ஸ்டீல்' பகுதியை இணைக்கும் பணி நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த இறுதிக் கட்ட பணி நிறைவை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் டில்லியில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று பார்வையிட்டார்.வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் கொங்கன் ரயில்வேயின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஞ்சய் குப்தா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்றனர்.

இது குறித்து வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் கூறியதாவது:இது வடக்கு ரயில்வேயின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த ரயில்வே பாலத்தின் கட்டுமான பணிகள் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் முழுமையாக நிறைவு பெறும்.இந்த பணியில் மிகப்பெரிய சவாலாக கருதப்பட்ட வளைவு அமைக்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த வளைவு அமைக்க 28 ஆயிரத்து 660 டன் ஸ்டீல் மற்றும் 66 ஆயிரம் கியூபிக் மீட்டர் கான்கிரீட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஸ்டீல் வளைவு 10 ஆயிரத்து 619 டன் எடை உடையது. இந்த வளைவின் இடையே பாலம் அமைப்பது மற்றும் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் படிப்படியாக துவங்கப்படும்.இந்த பாலம் மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களையும் தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE