கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பதற்றம், மிக பதற்றம் உள்ளிட்ட பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகள், சி.சி.டி.வி., கேமரா மூலம், கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 21,47,295 பேர் ஓட்டளிக்கின்றனர். அதற்காக, மாவட்டத்தில் 3001 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 14,404 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். 5,510 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.தேர்தலையொட்டி, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களுக்கும் 4,030 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,604 கண்ட்ரோல் யூனிட், 3,877 'விவி பேட்' இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.இதுகுறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கூறியதாவது:தேர்தலையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் பலத்த ேபாலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஓட்டுச்சாவடிகளில் உதவ 1,253 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பதற்றமான 211 ஓட்டுச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு தலா 4 பேர் வீதம் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1,509 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து ஒட்டுச்சாவடி மையங்களுக்கும் கையுறை, முகக் கவசம், கிருமிநாசினி, கவச உடை உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.தேர்தல் தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரையில் 350 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் ஓட்டுச்சாவடி மையங்களில் கவச உடை அணிந்து ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர 45 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE