தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தது ரூ.5,000 கோடி! லோக்சபா தேர்தலை விட ரூ.2,000 கோடி கூடுதலாக வழங்கல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சட்டசபை தேர்தலுக்காக, கடந்த சில நாட்களில் அரசியல் கட்சியினர், 5,000 கோடி ரூபாயை வாரி இறைத்து, வாக்காளர்களை பண மழையில் நனையச் செய்துள்ளனர். கடந்த, லோக்சபா தேர்தலை விட தற்போது, 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா

சட்டசபை தேர்தலுக்காக, கடந்த சில நாட்களில் அரசியல் கட்சியினர், 5,000 கோடி ரூபாயை வாரி இறைத்து, வாக்காளர்களை பண மழையில் நனையச் செய்துள்ளனர். கடந்த, லோக்சபா தேர்தலை விட தற்போது, 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டி நிலவும் நிலையில், மற்ற கட்சிகள் மத்தியில் அதிக தொகுதிகளை கைப்பற்றி, தங்களின் வலிமையை நிருபிக்க முட்டி மோதி வருகின்றன. இதில், அ.தி.மு.க., சார்பில், தொகுதிக்கு, சராசரியாக தலா, 10 கோடி ரூபாய் தலைமை செலவு செய்ய வழங்கிய நிலையில், கொங்கு மண்டலம், அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியில், வாக்காளர்கள் கவனிப்புக்கு, 30 கோடி முதல், 50 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதில், வாக்காளர்களுக்கு குறைந்த பட்சம் ஏரியாவுக்கு தகுந்த படியும், போட்டி அதிகம் உள்ள தொகுதிகளிலும், 500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, பணமாக, தங்க காயின், வீட்டு உபயோக பொருட்கள், பட்டு வேஷ்டி, புடவை என, தாராளமாக பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தி.மு.க., போட்டியிடும் தொகுதிக்கு தலா, 10 கோடியை செலவு செய்ய தலைமை முடிவு செய்த நிலையில், அது, மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வாக்காளர்கள் கவனிப்பை, தனியார் ஆலோசனை நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியினர் மேற் கொண்டனர். இந்த இரண்டு கட்சிகளுக்கு போட்டியாக, அ.ம.மு.க.,வும் களம் இறங்கியது. அக்ககட்சி போட்டியிடும், 161 தொகுதிகளில், 100 தொகுதிக்கு தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன் குக்கர் வழங்குவதாக கூறி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 61 தொகுதிகளை தேர்வு செய்து, அவற்றுக்கு ஓட்டுக்கு, 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரையும், வீட்டுக்கு ஒரு குக்கரும் வழங்கபட்டுள்ளன.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 500 ரூபாயும், தி.மு.க., சார்பில், 300 ரூபாய், அ.ம.மு.க., சார்பில், 200 ரூபபாய் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணி சார்பில், 1,500 கோடியும், தி.மு.க., சார்பில், 1,000 கோடி, அ.ம.மு.க., சார்பில், 500 கோடி என மொத்தம், 3,000 ரூபாய் கோடி வரை, வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,- தி.மு.க., சார்பில், தலா, 2,000 கோடி, அ.ம.மு.க., சார்பில், 1,000 கோடி என, கடந்த, சில நாட்களில், அரசியல் கட்சியினர், 5,000 கோடி ரூபாய் வரை, வாக்காளர்கள் கவனிப்புக்கு செலவு செய்துள்ளனர். இந்திய தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிக தொகை செலவு செய்துள்ளது, தமிழகத்தில் தான். கட்சிகளின் தாராளத்தால், வாக்காளர்கள் பண மழையில் நனைந்துள்ளதால், பணம் அதிக அளவில் வழங்கப்பட்ட தொகுதிகளில் ஓட்டுப்பதிவு, 80 சதவீதத்தை தாண்ட வாய்ப்புள்ளதாகவும், குறைத்து வழங்கப்பட்ட தொகுதிகளில், 70 சதவீதம் வரை, ஓட்டுப்பதிவு இருக்கும். தமிழகத்தில், அ.தி.மு.க., மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தண்ணீரை வாரி இறைத்துள்ளனர். அதே நேரத்தில், தி.மு.க., 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், இந்த முறை தவற விட்டால், மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில், அவர்களும் அ.தி.மு.க.,வுக்கு போட்டியாக பணத்தை வாரி வழங்கி உள்ளனர். இவர்களுக்கு போட்டியாக, தன் அரசியல் அங்கீகாரத்தை தக்க வைக்க, அ.ம.மு.க.,வும் பணத்தை வாரி வழங்கி உள்ளது. இது தவிர தேர்தலுக்காக, பிற வகையில் பல கோடி ரூபாயை, பிரதான கட்சிகள் செலவு செய்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கரூர் மாவட்டத்தில், ரூ.194 கோடி பணப் பட்டுவாடா: இந்தியாவிலேயே தேர்தலில் மிக அதிகமாக பணம் புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில் சர்வ சாதாரணமாக பணப் பட்டுவாடா நட்துள்ளது. 2016ல் அரவக்குறிச்சி தொகுதியில் பணம் பலமிக்க, தி.மு.க., வேட்பாளர் கே.சி.பழனிசாமியை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களமிறக்கப்பட்டார். அங்கு மாறி மாறி பணம் வினியோகம் செய்யப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலில், கரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், கட்சி மாறி, தி.மு.க.,வில் செந்தில்பாலாஜி போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் பா.ஜ.,வுடன், குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில், அ.தி.மு.க.,வுடன் நேரடியாக, தி.மு.க., மோதுகிறது. இந்த நான்கு தொகுதிகளில் பண வினியோகம் ஜோராக நடந்த போதும், பறக்கும் படையினர் வேடிக்கை பார்த்தாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: திருமங்கலம் பார்முலாவை விஞ்சும் அளவில் கரூர் பார்முலாவில், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பணப் புழக்கம் காணப்படுகிறது. இங்கு பலமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம், பிரசாரம், நட்சத்திர பேச்சாளர் வந்தால், அங்கு ஆட்களை கூட்டி வர உட்பட பல்வேறு வகையில் பணம் விளையாடியது. இறுதியாக, கரூரில், அ.தி.மு.க.,வில், ஓட்டுக்கு,, 3,000 ரூபாய் வீதம், 70.50 கோடி ரூபாய், தி.மு.க.,வில், 2,000 ரூபாய் வீதம், 46 கோடி ரூபாய்; அரவக்குறிச்சியில், பா.ஜ., 1,000 வீதம், 18 கோடி ரூபாய், தி.மு.க., 1,000 ரூபாய் வீதம், 19.50 கோடி ரூபாய்; கிருஷ்ணராயபுரத்தில், தலா, 500 வீதம், அ.தி.மு.க.,- தி.மு.க., இரு கட்சிகளும், சேர்த்து, 20 கோடி ரூபாய்; குளித்தலையில் தலா, 500 ரூபாய் வீதம், அ.தி.மு.க.,- தி.மு.க., இரு கட்சிகளும் சேர்த்து, 20.40 கோடி ரூபாயை வினியோகித்துள்ளன. இதன்படி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் தோராயமாக, 194.40 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா நடந்துள்ளது. மற்ற செலவுகளை சேர்த்தால், மொத்த தொகை எங்கேயோ போய் நிற்கிறது. கரூர் மாவட்டத்தில், பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு, செலவின பார்வையாளர்கள் உட்பட, 105 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதில், எந்த குழுவும், பணப் பட்டுவாடாவை தடுக்கவில்லை. மாறாக, சிறு வணிகர்கள், வீட்டு செலவுக்கு பணம் எடுத்து செல்வர்கள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்.பி., ஆகியோரை மாற்றியும் பயனில்லை. இந்நிலையில், 'தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 'சி -விஜில்' செயலி மூலமாக, கரூர் மாவட்டத்தில் இருந்து தான் அதிகளவு புகார் வந்துள்ளது. பணப்பட்டுவாடா நடந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X