அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஜெ., மறைவுக்கு பின், தமிழக நலன்களை பாதுகாக்கும் வல்லமை கொண்ட, ஒரு ஆளுமையை மக்கள் தேடுவதை கண்டேன். தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படாத துரோகிகளையும், ௧௦ ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்ட தீய சக்திகளையும், அடுத்த தலைமுறைக்கான ஆளுமையாக மக்கள் நினைக்கவில்லை. எதிர்கால தமிழகத்துக்கான ஆளுமையாக, நம் இயக்கத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
'டவுட்' தனபாலு: 'தமிழக தேர்தல் களத்தில், இரண்டு பெரும் கட்சிகளான, அ.தி.மு.க., - தி.மு.க.,வில், ஏதாவது ஒன்று தான் ஆட்சிக்கு வரும். பா.ஜ., ஒற்றை இலக்க இடங்களை பிடிக்கலாம்; நடிகர் கமலின் கட்சி, உங்கள் கட்சி, சீமான் கட்சி எல்லாம், 'வேஸ்ட்' தான்' என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்'டே கிடையாது. நிலைமை இவ்வாறு இருக்க, அ.ம.மு.க.,வை எதிர்கால ஆளுமையாக மக்கள் கருதுகின்றனர் என்பது சுத்த பேத்தல்!
காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்: தமிழகத்தில், ஈ.வெ.ரா., கொள்கையை ஒழிக்கவே, பா.ஜ., வந்திருக்கிறது என்று, பா.ஜ., - எம்.பி., ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 'சனாதன தர்மம்' என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர், ஈ.வெ.ரா., தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர். ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும், அ.தி.மு.க., அந்த, பா.ஜ., - எம்.பி.,யின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?
'டவுட்' தனபாலு: உங்களுக்கும், நீங்கள் வென்றதாக கூறும், ஈ.வெ.ரா., கோஷ்டிகளுக்கும் தான் வேறு வேலையில்லை; அ.தி.மு.க.,வுக்கு அப்படியில்லையே... எப்படியாவது, தமிழகத்தில் விஷ விதையை துாவி, நச்சு அறுவடை செய்ய வேண்டும் என துடிக்கும் உங்களைப் போன்றவர்களை, அ.தி.மு.க., இன்னமும் அறிந்திருக்காது என்ற, 'டவுட்' உங்களுக்கு இன்னமும் உள்ளதோ!
தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்: -தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே, நாளை முதல், கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் துவங்கும். அதற்காக, தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
'டவுட்' தனபாலு: நீங்கள் என்ன தான் சொன்னாலும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தான் சிறந்த வழி' என்பதை, உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், நம் நாட்டில் பல மாநிலங்களிலும் அது கண்கூடாகியுள்ளது. எனவே, அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், தேவையற்ற பீதி, மக்கள் மனதில் அச்சம் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான், இப்படி கூறுகிறீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE