வாய்தாவை ஒழிப்போம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'வாய்தா'வை ஒழிப்போம்!

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (3)
Share
'வாய்தா'வை ஒழிப்போம்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து,


'வாய்தா'வை ஒழிப்போம்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்ப வழி ஏற்படும்' என்றும் கருத்து தெரிவித்துள்ளது.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிகாரம் இருந்தால், ஒரு ஊழல் வழக்கை, 20 ஆண்டுகள் கூட இழுத்தடிக்க முடியும் என்பதை, நாம் பார்த்திருக்கிறோம். நீதிமன்றம் கொடுக்கும், 'வாய்தா' என்ற சலுகை தான், பல குற்றவாளிகளை வாழ வைக்கிறது; அவர்கள் மீண்டும் தவறு செய்ய, ஊக்குவிக்கிறது.
'ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை, எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது' என, சட்டம் இயற்ற வேண்டும்.வழக்குகளை விரைந்து முடிக்கும் அளவிற்கு, நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வழக்கிற்கு, காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
நீதி வழங்குவதற்கு பெரும் இடையூறாக இருப்பது, நீதிமன்றம் வழங்கும், தேவையற்ற வாய்தா தான். எதிர்காலத்தில், வாய்தா இல்லாத நீதிமன்றங்கள் உருவாக வேண்டும். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றத்தைக் கண்டால், அச்சம் ஏற்பட வேண்டும்.


வாங்க... அரசியல் பேசலாம்!ரா.எத்திராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருவழியாக, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. பிரசார சத்தம் ஓய்ந்துவிட்டது. ஆனால் அனைவரும், தேர்தல் காலத்தில் மட்டுமின்றி, அன்றாடம் அரசியல் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை அலசி ஆராய வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் வெறும் பிரசாரத்தை மட்டும் நம்பி, அரசியல்வாதியை எடைபோடக் கூடாது.டீக்கடை முதலான, மக்கள் கூடும் இடங்களில், 'இங்கு அரசியல் பேசக் கூடாது' என, 'போர்டு' வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. அதை மாற்றி, 'வாங்க, அரசியல் பேசலாம்' என, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்கள், பெண்கள் ஆகியோரும், அரசியல் குறித்து விவாதிக்க வேண்டும்.அரசியல்வாதிகளின் பேச்சை கவனிக்க வேண்டும். அனைத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது, அறிவுக்கு எதிரானது. ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்பதே
சரியானது.மாணவர்கள், ஓட்டு அளிக்கும் உரிமையைப் பெறுவதற்கு முன்பே, அரசியலமைப்புச் சட்டம் குறித்து அறிந்து கொள்வது முக்கியம்.'அரசியல்' என்பது, சாக்கடை அல்ல... அது தான், நம்மை ஆள்கிறது; அதை துாய்மைப்படுத்த வேண்டியது, நம் கடமை.அரசியலை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. நம் அன்றாட வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்தது, அரசியல். அது நம்மை சுற்றியே இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை, நம் வாழ்க்கையை தீர்மானிப்பது, அரசியல் தான்.
'அரசியல்வாதி' என்ற தனி இனம் ஏதும் கிடையாது. வாரிசுகள் ஆள்வதற்கு, இது ஒன்றும் மன்னர் ஆட்சி அல்ல; ஓட்டுப் போடும் அனைவரும், அரசியல்வாதிகளே!நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பது அரசியல் தான். அதிலிருந்து விலகியோட முயற்சிக்காதீர்; அதை சீர்படுத்த ஒத்துழையுங்கள்.


வெறுப்பை வளர்க்காதீர்!ஸ்ரீராம் சுந்தர், கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய பட்ஜெட்டில், குறிப்பிட்ட அரசுடமை வங்கிகள் தனியார் மயமாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள், பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அரசுடமை வங்கிகளை தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இவர் கவர்னராக இருந்த காலத்தில், வாராக்கடன் பற்றி அறிக்கை வெளியிடும் போது, ஒழுங்குமுறை இல்லாமல் அரசுடமை வங்கிகள் கடன் தருவதால், வாராக்கடன் பெருகி வருகிறது. இந்த ஒரு காரணத்தால் அரசுடமை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படும் என, தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சிகள், இந்திராவின் அரசுடமை நோக்கத்தை, தற்போதைய அரசு தவிடுபொடி ஆக்குவதாக தெரிவித்துள்ளன. அரசின் நிதிக்கொள்கை, அந்தந்த காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். 1991ல் நரசிம்மராவ் தலைமையிலான அரசு, பொருளாதார சீர்திருத்ததில் புரட்சியே நடத்தியது. அந்த முடிவுக்கு பின், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், சேவையிலிருந்து விலகி, லாப நோக்கில்
செயல்பட துவங்கின.கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகளவில் வங்கி சேவை விரிவடைந்த போதும், அரசு வங்கிகள் மிகவும் மெதுவாகவே, தகவல் தொழில்நுட்பத்திற்கு மாறின. தனியார் வங்கிகள், மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தன. அரசு பலமுறை மானியம் கொடுத்தும், பல அரசு வங்கிகளின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை, ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. அரசு வங்கி ஊழியர்களின் அலட்சியமே, வங்கி சேவை குறைபாடுக்கு முக்கிய காரணம்.வாடிக்கையாளர் சேவையில் குறிப்பிட்ட சில வங்கிகளை தவிர்த்து, பெரும்பான்மை வங்கிகள் அலட்சிய போக்கையே கடைப்பிடிக்கின்றன.இந்த டிஜிட்டல் காலத்திலும், இன்னும், 'சர்வர்' வேலை செய்யவில்லை, அளவுக்கு அதிகமான வாராக்கடன், அடிக்கடி போராட்டம், சம்பள உயர்வு, விடுமுறை என, அரசுடமை வங்கிகள் தத்தளிப்பதால், அவை
திவால் ஆவதை தவிர்க்கவே, தனியார் மயம் என்பதை உணர வேண்டும்.மேலும், ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகை பாதுகாக்கப்படும் என, அரசு மற்றும் நிதி ஆயோக் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், போராட்டம் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பது, வங்கி ஊழியர்கள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X