'இப்படி பல திறமைகளை வைத்திருப்பதால் தான், ஆயிரம் விளக்கில் போட்டியிட, பா.ஜ., உங்களை தேர்ந்தெடுத்ததோ' என, கேட்கத் தோன்றும் வகையில், நடிகை குஷ்பு பேட்டி:எனக்கு எந்த ஒரு விஷயத்துக்குமே பயம் கிடையாது. 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது; சொந்த வீடு கிடையாது; மொழி தெரியாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இங்க வந்து ஜெயிச்சுக் காட்டியிருக்கேன். ஒவ்வொரு கட்டத்துலயும் பிரச்னைகள் வரும்போதும், தனி ஒருத்தியா தான் போராடி சமாளிச்சிருக்கேன்.
'வெற்றி பெற்று, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான், உங்கள் விருப்பம் என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்தது தானே; கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: அ.தி.மு.க., பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. பணபலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. பணத்தை நம்பி, நாங்கள் களத்தில் நிற்கவில்லை.
'தேர்தல் முடிவுக்கு பின், களத்தில் இறங்குவார்; இப்போதைய பதுங்கல், 'பிரிபிளான்' தான் என, சில தகவல்கள் தெரிவிக்கின்றனவே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: சித்தி சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத் தான். சிறையில் அவர் இருந்தபோதும் சரி, வெளியே வந்த பிறகும் சரி, எனக்கு அவர் ஆதரவாகத் தான் இருக்கிறார். அவர் தற்காலிகமாக அரசியலிலிருந்து ஒதுங்கித் தான் இருக்கிறார்; அரசியலை விட்டு விலகவில்லை.
'உங்களுக்கு தந்தையாக கருணாநிதி வாய்த்தது போல; கருணாநிதிக்கு நீங்கள் மகனாக வாய்த்தது போல எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேட்டி: கருணாநிதி இப்போது இல்லை என்பது மனதை வாட்டும் வருத்தமே. ஆனால், நான் அரசியல் பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த நாள்தொட்டு, அவர் வழிகாட்டுதலில் தொடர்ந்து வளர்ந்தவன். அவர் இருந்திருந்தால் ஒவ்வொன்றையும் இப்படி செய்திருப்பார் என்று எண்ணி பார்த்து, எச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
'ஜெ., விருப்பப்படியே செயல்படுகிறீர்கள் என்பது தெளிவாகிறது. ஜெ., மாதிரி செயல்பட்டு விடாதீர்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: ஜெ., ஆசையே, எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான். நாங்க, ஜாதி, மதம் எதையும் பார்க்கிறதில்லை. இது கூட, ஜெ., வழி தான். ஜெ., ஆட்சி அமைந்த தனித்தன்மையில் தான் நாங்க தொடர்ந்து போறோம். உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம். அதில் எந்த சமரசமும் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE