புதுடில்லி:டில்லியில் ,இந்திய - ரஷ்ய வெளிஉறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோ, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அவர், , இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - ரஷ்யா இடையிலான பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவது, இரு நாடுகள் இணைந்து நடத்த உள்ள மாநாடு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
கடந்த, 2019ல் விளாடிவாஸ்டோக்கில் நடந்த, இந்திய - ரஷ்ய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் செயல்வடிவங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, ரஷ்ய துாதரகம் தெரிவித்து உள்ளது. இந்தியா - ரஷ்யா இடையே, பல ஆண்டுகளாக ஆழமான நட்பும், நல்லுறவும் நீடித்து வருகிறது. இரு நாடுகளும், ஆண்டு தோறும் மாநாட்டை நடத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. இந்தாண்டு, இம்மாநாட்டை நடத்துவது தொடர்பாக, ஜெய்சங்கரும், செர்ஜி லவ்ரோவும் பேச்சு நடத்தினர். இதற்கிடையே, செர்ஜி லவ்ரோவை வரவேற்பதில், ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடான, இந்தியா பெருமை கொள்வதாக, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, 'டுவிட்டரில்' தெரிவித்துஇருந்தார்.
ரஷ்ய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்ய வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சங்களில், இந்தியாவுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE