டெஹ்ரான்:உக்ரைன் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள், 10 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக, ஈரான், முதன் முறையாக அறிவித்துள்ளது.
கடந்தாண்டு துவக்கத்தில், ஈரான் வான்வெளியில் பறந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது. இதில், 176 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க போர் விமானம் என தவறாக கருதி, தங்கள் நாட்டு ராணுவ படை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக, ஈரான் தெரிவித்தது.
எனினும், உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, விமான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, சமீபத்தில் இறுதி அறிக்கையை ஈரான் வெளியிட்டது. அதில், மனித தவறால் ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், தாக்குதலுக்கு யாரையும் பொறுப்பாக்க வில்லை. இதற்கு, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஈரான், கண்துடைப்பு விசாரணை நடத்தியதாக குற்றஞ்சாட்டின.இந்நிலையில், அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், அந்நாட்டுடன் சமூக உறவு பாராட்டி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை அகற்ற, ஈரான் முன் வந்துள்ளது.அதற்கு வசதியாக, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளுடன், ஈரான் பேச்சு நடத்தத் துவங்கியது.
இந்த பேச்சில், அமெரிக்க மறைமுகமாக பங்கு கொள்ள உள்ளது. இந்த பேச்சு துவங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன், உக்ரைன் விமான தாக்குதல் தொடர்பாக, ராணுவ அதிகாரிகள், 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, ஈரான் ராணுவ வழக்கறிஞர், கோலம்மபாஸ் டோர்க்கி தெரிவித்தார். எனினும் அவர்களின் பெயர்களை ஈரான் வெளியிடவில்லை.
8 பேரை கொன்றுமுதியவர் தற்கொலை
ஈரானில், அவ்வாஸ் நகரில், முதியவர் ஒருவர், தன் மகன் மற்றும் இரு மனைவியரின் உறவினர்கள் ஏழு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவர், பல கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறையில் இருந்து, சமீபத்தில் விடுதலையானதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE