கொழும்பு:இலங்கையில், 2019 ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, பழமைவாத மதகுரு ஒருவர் மூளையாகச் செயல்பட்டதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 270 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, உள்ளூர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பயங்கரவாதிகள், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு, இந்த தாக்குதலை நடத்தியது, விசாரணையில் தெரியவந்தது.
இந்த பயங்கர தாக்குதல் சம்பவம், அப்போதைய அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்த தாக்குதல் குறித்து, இலங்கை பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, 32 பேர் மீது, கொலை மற்றும் கொலைக்கு சதித் திட்டம் தீட்டிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அட்டர்னி ஜெனரலிடம், எட்டு அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சந்தேகத்துக்கு இடமான, 75 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம், 211 பேரை கைது செய்துள்ளோம். பழமைவாத சிந்தனை உடைய, மதகுரு நவ்பர் மவுல்வி என்பவர், இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இவருக்கு, ஹஜ்ஜுல் அக்பர் என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE