கோவை:கோவையில், தி.மு.க., வேட்பாளர் காரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது, போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, தொண்டாமுத்துார் தொகுதியில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, தி.மு.க., சார்பில், கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர், நேற்று காலை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியை பார்வையிட காரில் சென்றார்.
பரபரப்பு
அப்போது, அவரது காரை மறித்த நபர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரது காரை நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர் வேறு ஒரு காரில் ஏறி செல்ல முயன்றார்.ஆனால், அந்த காரையும் பின்தொடர்ந்து ஓடியவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, அவரது காரை தாக்க துவங்கினர். இவர்களை பின்தொடர்ந்து ஓடிய போலீசார், லேசான தடியடி நடத்தி, அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர்.
இச்சம்பவத்தால், செல்வபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க., வேட்பாளரை முற்றுகையிட்டு, காரை தாக்கியதை அறிந்த, தி.மு.க., வினர், தொண்டாமுத்துார் உட்பட பல்வேறு இடங்களில் கட்சி கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து, கலெக்டரை சந்தித்து, சிவசேனாபதி புகார் அளித்தார்.
பின், அவர் கூறியதாவது:மக்கள் மிகவும் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். கூட்டம், கூட்டமாக மக்கள் வருவது, மாற்றத்துக்கான அறிகுறியாக தெரிகிறது. அ.தி.மு.க.,வினர் தோல்வி உறுதியாகி விட்டதால், வன்முறையில் இறங்கிஉள்ளனர்.கொலை மிரட்டல்என்னை செல்வபுரம் பள்ளியில் வைத்து சிறைப்பிடிக்க முயன்று தாக்கினர்.
போலீசார் முன்னிலையிலேயே கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொண்டாமுத்துார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். இது தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE