புதுடில்லி:அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சிறப்பு துாதரான ஜான் கெர்ரி, டில்லியில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை, சந்தித்து பேசினார்.
அமெரிக்க அரசு, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு துாதராக, ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ஜான் கெர்ரி தலைமையிலான குழு, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளது.
டில்லியில், ஜான் கெர்ரி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்து பேசினார்.இந்த பேச்சு பயனுள்ள வகையில் இருந்ததாகவும், பருவநிலை நிதி, கூட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டரில்' தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், அந்நாடு, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது.இதையடுத்து, வரும் 22ம் தேதி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பான மாநாட்டை, ஜோ பைடன் கூட்டியுள்ளார்.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ள இம்மாநாட்டில், பிரதமர் மோடி உள்ளிட்ட, 40 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்மாநாட்டில், பருவநிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் கருத்துகளை இறுதி செய்வது தொடர்பாக, ஜான் கெர்ரியுடன், பிரகாஷ் ஜாவடேகர் விவாதித்ததாக கூறப்படுகிறது.'உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியா, பருவநிலை பிரச்னைக்கான தீர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் துாய்மையான சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, கரியமில வாயு கட்டுப்பாடு உள்ளிட்ட செயல் திட்டங்களுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்' என, அமெரிக்க துாதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE