பரங்கிப்பேட்டை : கிள்ளை முழுக்குத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முடசல் ஓடை கிராமத்திற்கு மாற்றி ஓட்டளிக்க ஏற்பாடு செய்ததை கண்டித்து அப்பகுதியினர் தேர்தலை புறக்கணித்து, மறியலில் ஈடுபட்டனர்.
கிள்ளை அடுத்த முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர்., திட்டு மற்றும் முடசல் ஓடை ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் பல ஆண்டுகளாக முழுக்குத்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஓட்டு போட்டு வந்தனர்.கொரோனா தொற்றை தடுப்பதற்காக, 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன. அதில், முழுக்குத்துறை ஊராட்சி தொடக்கப் பள்ளி ஓட்டுச்சாவடியில் இருந்து 400 ஓட்டுகள் முடசல் ஓடை கிராம ஓட்டுச்சாவடி மையத்திற்கு மாற்றப்பட்டது.அதே போல், முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்த 400 ஓட்டுகள் முழுக்குத்துறை ஊராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு மாற்றப்பட்டது.
அப்பகுதியில் பூத் சிலிப் வழங்கப்படாததால் ஓட்டுச்சாவடி மாற்றப்பட்ட விபரம் அப்பகுதி மக்களுக்குத் தெரியவில்லை.நேற்று காலை இந்த விபரம் தெரியவந்ததும், ஆத்திரமடைந்த முழுக்குத்துறை கிராமத்தினர், ஓட்டு போடச் செல்லாமல், அப்பகுதியில் காலை 9:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, சப் கலெக்டர் மதுபாலன், தாசில்தார் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.
முழுக்குத்துறை கிராமத்திலேயே ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். ஒன்றரை கி.மீ., துாரம் சென்று ஓட்டளிக்க முடியாது என கூறியதால், வேறு வழியின்றி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.இந்நிலையில், மதியம் 12:15 மணிக்கு, முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்த சிலர், முழுக்குத்துறை ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.இந்த தகவல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.தொடர்ந்து, தாசில்தார் ஆனந்த், வரும் தேர்தலில், முழுக்குத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் முழுக்குத்துறை ஓட்டுச்சாவடி மையத்திலேயே, ஓட்டளிக்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மதியம் 1:00 மணியளவில் ஓட்டளிக்கச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE