கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 20 ஓட்டுச்சாவடிகளில் இயந்திரங்கள் மக்கர் செய்ததால், ஓட்டுப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளில், 3001 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அதற்காக, 4,030 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,604 கண்ட்ரோல் யூனிட், 3,877 'விவிபேட்' இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று காலை 7:00 மணியளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. அப்போது மாவட்டம் முழுதும் 20 ஓட்டுச்சாவடிகளில் இயந்திரங்கள் இயங்காமல் 'மக்கர்' செய்தது. அதையடுத்து, டெக்னீஷியன்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
இதனால், பழுதான இடங்களில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.மேலும், கடலுார் முதுநகர் சாலக்கரை மார்க்கெட் கமிட்டி பூத்தில் பழுதான இயந்திரம் சரி செய்ய முடியாததால் புதிய இயந்திரம் வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு துவங்கியது.அடுத்து, கடலுார் முதுநகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவான நிலையில், பகல் 12:00 மணியளவில் இயந்திரம் பழுதாகி ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டதால் அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம் செய்தனர்.
அதையடுத்து, புதிய இயந்திரம் வரவழைக்கப்பட்டு மாற்றியதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.ஓட்டு இயந்திரம் கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி இல்லாததும், பயிற்சியில் ஆர்வம் செலுத்தாததும் காரணமாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE