சென்னை : சென்னை அம்பத்துார் தொகுதி, 82வது வார்டு, மேனாம்பேடு, இந்தியன் வங்கி காலனியில், 68வது ஓட்டு பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 7 மணி அளவில் ஓட்டு பதிவு துவங்கியது.
ஆனால், அங்குள்ள ஓட்டு பதிவு இயந்திரம், சரியாக இயங்காததால், வாக்காளர்கள் காத்திருந்தனர். காலை, 10:00 மணிக்கு பின் இயந்திரம் சீரானது. அதனால், வாக்காளர்கள், 3 மணி நேரம் காத்திருந்து, ஓட்டளித்தனர். மேற்கண்ட பிரச்னை காரணமாக, இரவு, 7:00 மணிக்குள், ஓட்டளிக்க வரும் வாக்காளர்களுக்கு வசதியாக, உரிய கால அவகாசம் வழங்கப்படும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.மாதவரம் தொகுதி, புழல் அடுத்த வடகரை ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 153வது ஓட்டு பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த, ஓட்டு பதிவு இயந்திரம் காலை, 7:00 மணியில் இருந்து, 3 முறை பழுதாகி, ஓட்டு பதிவு காலதாமதமானது.
இதையடுத்து, மதியம், 12:30 மணி அளவில், புதிய இயந்திரம் மூலம், ஓட்டு பதிவு துவங்கியது. அதே போன்று, மொண்டியம்மன் நகரில், 266வது ஓட்டு பதிவு மையத்தில் இருந்த, இயந்திரத்திலும் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, 1 மணி நேரத்திற்கு பின் சீரமைக்கப்பட்டு, ஓட்டு பதிவு தொடர்ந்தது.ஓட்டு பதிவு இயந்திரம் பழுது காரணமாக, ஒரு மணி நேரம் ஓட்டு பதிவு தாமதமானதால், பொதுமக்கள் அவதியுற்றனர்.சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், பெரும்பாலான ஓட்டுசாவடிகளில், சமூக இடைவெளியின்றி மக்கள் நெருக்கமாக நின்றிருந்தனர். அம்பேத்கர் நகர் போன்ற மேற்கு பகுதிகளில், வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை.
பொன்னியம்மன் நகருக்கு உட்பட்ட, எண், 131 வது ஓட்டு சாவடியில், 10.25 மணிக்கு, 110 ஓட்டுகள் பதிவான நிலையில், இயந்திரம் பழுதானது. இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின், 11:15 மணிக்கு, மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஓட்டு பதிவு துவங்கியது. இதனால், 50 நிமிடம் மக்கள், வரிசையில் காத்திருந்தனர். பல ஓட்டுசாவடிகள், அளவில் சிறியதாக இருந்ததால், தேர்தல் அலுவலர்கள், ஓட்டு சாவடி முகவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முத்தியால்பேட்டை, சாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள, ஓட்டு சாவடி எண், 89ல், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம் பழுதால், நேற்று காலை, 7 மணிக்கு துவங்கி, 9.25 மணி வரை ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
மாற்று இயந்திரம் கொண்டு வந்த பின் ஓட்டுப்பதிவு துவங்கியது.ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், போர்ச்சுகீசியர் தெருவிலுள்ள பள்ளியில் ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது.எஸ்பிளனேடு, வால்டாக்ஸ் சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 10 மணிக்கு ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதானது. பின்,10.30 மணிக்கு மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது.ஏழுகிணறு அம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் காலை, 8 மணியளவில், 'கன்ட்ரோல் யூனிட்' இயந்திரம் பழுதானது. அரை மணி நேரத்துக்குப் பின் ஓட்டுப்பதிவு துவங்கியது.எஸ்பிளனேடு, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த ஓட்டு பதிவின் போது, காலை, 8.20 மணிக்கு, கன்ட்ரோல் யூனிட் இயந்திரம் பழுதானதால் ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. பின் ஒரு மணி நேரம் கழித்து ஓட்டுப்பதிவு துவங்கியது.தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், ஓட்டுச் சாவடி எண் 13, 17 ஓட்டு இயந்திரங்கள் பழுதானதால், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது.கொருக்குபேட்டை, பாரதிநகர் மாநகராட்சி பள்ளியில் ஓட்டு இயந்திரம் பழுதால் அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமத மானது.கொருக்குபேட்டை, காமராஜ் நகர் மாநகராட்சி பள்ளியில் ஓட்டு இயந்திரம் பழுதால், 20 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE