மாதவரம் : எண்ணுார் துறைமுக போக்குவரத்திற்கான, பிரதான சாலையின் சர்வீஸ் சாலையை, கனரக வாகன ஓட்டிகள் ஆக்கிரமிப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, மாதவரம், 200 அடி சாலை, கில்பன் நகர் - மினி ரவுண்டானா சந்திப்பில் இருந்து, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் வரையிலான சர்வீஸ் சாலையை, 2 கி.மீ., துாரத்திற்கு, கனரக வாகன ஓட்டிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.மேலும், பல வாகனங்கள், 'பழுது' நீக்கும் பணிக்காக, நாள் கணக்கில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், மாதவரம் இணைப்பு சாலைகள் வழியாக மாதவரம், 200 அடி சாலைக்கு செல்வோர், ஆக்கிரமிப்பு வாகனங்களால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை கவனிக்க முடியாமல், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், இரவில் சர்வீஸ் சாலை வழியாகச் சென்று வரும், இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் மோதி, விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.எனவே, மாதவரம் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE