பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நெகமம் சுற்றுப்பகுதியில், சீமாறு உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது. இருப்பினும், வெளி மாநில விற்பனைக்கு அனுப்பப்படாத காரணத்தால், குடோன்களில் தேக்கம் கண்டுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி தென்னை வளம் மிக்கதால், இளநீர், தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்காய் மட்டையில் இருந்து நார் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது.தேங்காய் நார் தவிர, ஏராளமான பெண்கள் சீமாறு உற்பத்தி செய்து, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, சீமாறு உற்பத்திக்கு தேவையான தென்னை ஓலைகள் கிடைக்காததால், உற்பத்தி முடங்கியிருந்தது.பருவமழைக்கு பின், சமீப நாட்களாக வெயிலும் சுட்டெரிப்பதால், தென்னை மட்டை உதிர்வது அதிகரித்துள்ளது. இதனால், சீமாறு உற்பத்தி தொழில் ஆங்காங்கே மீண்டும் சீரடைந்துள்ளது.இதுகுறித்து, சீமாறு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:கொரோனா தொற்று துவங்கி, உச்சத்தில் இருந்தபோது சீமாறு உற்பத்தி முடங்கி இருந்தது. அப்போது, ஒரு கிலோ சீமாறு, 22 ரூபாய்க்கு விற்பனையானது.தற்போது தொழில் சீரான நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து, 75 செ.மீ., நீள சீமாறு இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய தயாரிப்பான, 53 செ.மீ., நீள சீமாறு உற்பத்திக்கு, வரவேற்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், தொழில் முடங்கி, உற்பத்தி செய்யப்படும் சீமாறுகள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படாமல், குடோன்களில் சேகரித்து வைக்கப்படுகின்றன. பல நுாறு பெண்கள் வேலையிழந்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE