வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால், வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் மற்றும் விற்பனை குறித்து வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இதன் பயன்பாடு சுற்றுலாநகரமான வால்பாறையில் குறைந்தபாடில்லை.கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மீண்டும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில், டீ, உணவுப்பொருட்கள் போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படுகின்றன.அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.குறிப்பாக, திறந்தவெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகள், உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறையில் சுற்றுலாபயணிகள் திறந்த வெளியில் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால், வனவிலங்குகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் இணைந்து, முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை யார் பயன்படுத்தினாலும், அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அதேபோல, மொத்த விற்பனையாளர் மற்றும் இவற்றை பயன்படுத்தும் நுகர்வோருக்கு அரசு உத்தரவுப்படி அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, இனி வரும் காலங்களில் வால்பாறையில் சுகாதாரத்தை பாதுகாக்கவும், அரிய வகை வனவிலங்குகளை பாதுகாக்கவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE