சென்னை : ''மக்கள் எழுச்சியுடன் ஓட்டு போட வருகின்றனர்; தேர்தல் முடிவு சிறப்பானதாக இருக்கும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட, தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி., கல்லுாரி ஓட்டுச் சாவடியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் நேற்று காலை, 8:00 மணிக்கு வந்து, ஓட்டு போட்டார்.
பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:ஜனநாயக கடமையாற்ற குடும்பத்துடன் வந்தோம். தமிழகம் முழுதும் மக்கள் எழுச்சியுடன் ஓட்டு போட்டு வருவதாக தகவல் வருகிறது. மக்கள், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதை உணர்கிறேன். மே, 2ல் தேர்தல் முடிவும், சிறப்பானதாக இருக்கும் என, நம்புகிறேன்.தோல்வி பயத்தால், கொளத்துார், சேப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில், தேர்தலை நிறுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., புகார் அளித்தது. புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் இ.பி.எஸ்., சொந்த ஊரில் ஓட்டு
முதல்வர் இ.பி.எஸ்., சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.முதல்வர் இ.பி.எஸ்., சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டசபை தொகுதியில், ஏழாம் முறையாக போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக உள்ள இவர், இடைப்பாடி தொகுதியில் உள்ள, தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் இரவு தங்கினார்.நேற்று காலை, தன் வீடு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின், வீட்டில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அவரது தாய் தவுசாயம்மாள் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அங்கிருந்து, முதல்வர், அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார், மருமகள் திவ்யா, பேரன் ஆதித் ஆகியோருடன், சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்துக்கு நடந்து சென்றார். காலை, 10:45 மணிக்கு வரிசையில் நின்று, ஓட்டு போட்டார். அதேபோல், அவரது குடும்பத்தினரும் ஓட்டு போட்டனர். பின், நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறுகையில், ''இத்தேர்தலில், மக்கள் அனைவரும் ஓட்டு போட்டு, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்,'' என்றார்.
அ.தி.மு.க., ஆட்சி ஓ.பி.எஸ்., நம்பிக்கை
பெரியகுளம்:''அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்,'' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கூறினார்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை செவன்த்டே நர்சரி மழலையர் பள்ளியில், போடி அ.தி.மு.க., வேட்பாளரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தாய் பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெய பிரதீப், மருமகள்கள் ஆனந்தி, கீர்த்திகாவுடன், நேற்று காலை, 8:40 மணிக்கு ஓட்டளித்தார். 90 வயதாகும் பழனியம்மாள், 'வீல் சேரில்' வந்தார். ஓட்டுச்சாவடிக்கு, 8:25 மணிக்கு வந்த துணை முதல்வர், தன் தாய்க்காக, 10 நிமிடங்கள் காத்திருந்தார். தாய் ஓட்டளித்த பின், துணை முதல்வர் ஓட்டளித்தார். முன்னதாக, வீட்டருகே உள்ள சித்திவிநாயகர், ஜெயம் விநாயகரை வணங்கிவிட்டு
ஓட்டளிக்க வந்தார்.பின், ஓ.பி.எஸ்., கூறுகையில், ''அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE