கோவை :'கோவை தெற்கு தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் பட்டுவாடா மும்முரமாக நடக்கிறது. விசாரித்து, சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, தேர்தர் அலுவலரிடம், ம.நீ.ம., தலைவர் கமல் புகார் அளித்தார்.கோவை தெற்கு தொகுதியில், வானதி சினிவாசன் - பா.ஜ., கமல் - ம.நீ.ம., மயூரா ஜெயகுமார் - காங்.,
போட்டியிடுகின்றனர்.
குற்றச்சாட்டு
இங்கு, நேற்று காலை, 7:00 மணி முதலே, வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.அப்போது, 84வது வார்டு, கெம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளியில் ஓட்டளித்தவர்களுக்கு, பரிசுப் பொருட்கள், பணம் வழங்க, டோக்கன் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.சென்னையில் ஓட்டளித்து விட்டு, விமானத்தில் வந்த, மக்கள் நீதி மய்யம் தலைவரும், வேட்பாளருமான கமல், தன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனுடன், அந்த ஓட்டுச் சாவடிக்கு நேரில் சென்றார். தேர்தல் நிலை அலுவலர்களிடம் ஓட்டுப்பதிவு நிலவரங்களை விசாரித்தார். அவரது கட்சி நிர்வாகிகள், மாற்று கட்சி யினர் டோக்கன் வினியோகிப்பது தொடர்பாக, தெரிவித்தனர்.
அங்கு, நிருபர்களிடம் கமல் கூறியதாவது:ஓட்டுப்பதிவு நன்றாக நடக்கிறது; வெளியே, பண பட்டுவாடா மும்முர மாக நடக்கிறது. பொருளாக பெற்றுக் கொள்ளச் சொல்லி, டோக்கன் வழங்குகின்றனர். எல்லா இடங்களிலும் பணம் பட்டுவாடா அதிதீவிரமாக நடக்கிறது. குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க, மீண்டும் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டியிருக்கும்; அதை நாங்கள் வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
அசாதாரண சூழல்
பின், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்தை, நேரில் சந்தித்து புகார் கொடுத்தார். புகாரில், 'ஸ்ரீ கணபதி ஏஜன்சீஸ்' என குறிப்பிட்டு வழங்கியிருந்த டோக்கன் மாதிரியை இணைத்திருந்தார்.புகாரில் கூறியிருப்பதாவது:கெம்பட்டி காலனியில் உள்ள வாக்காளர்களுக்கு, டோக்கன் வினியோகித்து வருகின்றனர். அதை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என, சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர். அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள், மேற்கண்ட டோக்கன்களை கொடுத்ததாக தெரியவந்து உள்ளது. சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்ட நபர்களையும், அவர்கள் சார்ந்துள்ள கட்சியையும், குற்றத்துக்கு துணை நிற்கும் வேட்பாளரையும் விசாரித்து, வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வானதி மறுப்பு
பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனின், 'டுவிட்டர்' பதிவு:ம.நீ.ம., மற்றும் காங்., கட்சியினர் திட்டமிட்டு, தேர்தல் நாளில் ஒரு நாடகத்தை உருவாக்கி, அதன் வாயிலாக ஒரு மாயையை தோற்றுவித்துள்ளனர். அவர்கள் இருவரும் தோல்வி பயத்தால், நாங்கள் வாக்காளர்களுக்கு, 'டோக்கன்' கொடுத்ததாக கதைகளை புனைந்துஉள்ளனர்.என் வெற்றியை சீர்குலைப்பதற்காக, இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற புகார்களை, இரு கட்சியினரும் கூறுகின்றனர். அவர்கள் மீது அவதுாறு வழக்கு தொடருவேன். தவறான புகார்களை கடுமையாக மறுக்கிறேன்; கண்டிக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
விதிகளை மீறிய கமல்
கமல், தன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் பாதுகாவலர்கள் உடன், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிக்குள் சென்றார். அவர்களை, தேர்தல் அலுவலர்கள் தடுத்து நிறுத்தவில்லை.ஒவ்வொரு சாவடியாக கமல் சென்று, ஓட்டுப்பதிவு நிலவரங்களை கேட்டறிந்தார். தேர்தல் விதிமுறைப்படி, வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே ஓட்டுச்சாவடிக்குள் செல்ல வேண்டும்; அவர்களுக்கு மட்டுமே அலுவலர்கள் பதிலளிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''வேட்பாளர் மட்டுமே ஓட்டுச்சாவடிக்குள் நுழைய அனுமதி. கமலுடன் அவரது மகளும் உடன் செல்வது, நீங்கள் சொல்லியே தெரிகிறது. உடனடியாக, தேர்தல் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கிறேன்,'' என்றார்.
போலீசார் விசாரணை
தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''ம.நீ.ம., வேட்பாளர் கமல், காங்., வேட்பாளர் மயூரா ஜெயகுமார் கொடுத்த புகார்களை, காவல் துறைக்கு பரிந்துரைத்துள்ளேன். போலீசார் விசாரித்து, வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை
எடுப்பர்,'' என்றார்.
காங்., வேட்பாளர் மறியல்
இதே குற்றச்சாட்டை கூறி, காங்., வேட்பாளர் மயூரா ஜெயகுமார், வைசியாள் வீதியில், நேற்று காலை, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து, விசாரிப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. மயூரா ஜெயகுமார் கூறியதாவது:அதிகாலை முதலே, வீடு வீடாக பணப் பட்டுவாடா நடந்துள்ளது. சில நெருக்கடியான இடங்களில் மட்டும், டோக்கன் மற்றும் விசிட்டிங் கார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.சில இடங்களில், வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வந்து, டோக்கன்களை பெற்றுக் கொள்ளவும் வசதி செய்திருந்தனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால் தான் மறியலில் இறங்கினேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE