திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 32 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி சரி செய்யப்பட்டது.அவ்வகையில், தாராபுரம் தொகுதியில், நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி மையங்களில், பேட்டரி கோளாறு; 'விவி பேட்' பிரச்னைகளால், பத்து மெஷின்கள் உடனடியாக மாற்றப்பட்டன. முன்னரே கோளாறு கண்டறியப்பட்டதால், ஓட்டுப்பதிவு தாமதம் தவிர்க்கப்பட்டது. சி.எஸ்.ஐ., பள்ளியில், ஓட்டுச்சாவடி எண்: 159ல், இயந்திரம் பழுதடைந்ததால், அரை மணி நேரம், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, பொங்கலுார், சேமலை கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி எண், 361 ல், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது; இதனால், காலை, 7:40 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட புனித தோமையர் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி எண், 222 ல், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. காலை, 10:20 மணிக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் 10:40 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE