அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தலில் 72.78 சதவீதம் ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் 72.78; புதுச்சேரியில் 81.55 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.நிதானமாக தெளிவாக மக்கள் கடமையாற்றினர்; பொறுமையாக வரிசையில் நின்று தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். கேரளாவில் ஒரே நாளில் நடந்த தேர்தலும் அமைதியாக முடிந்தது. அசாம் மாநிலத்தில் அதிகளவில் மக்கள் ஓட்டளித்து அசத்தினர். மேற்கு
தமிழகம், சட்டசபை தேர்தல், ஓட்டுப்பதிவு,

சென்னை : தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் 72.78; புதுச்சேரியில் 81.55 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

நிதானமாக தெளிவாக மக்கள் கடமையாற்றினர்; பொறுமையாக வரிசையில் நின்று தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். கேரளாவில் ஒரே நாளில் நடந்த தேர்தலும் அமைதியாக முடிந்தது. அசாம் மாநிலத்தில் அதிகளவில் மக்கள் ஓட்டளித்து அசத்தினர். மேற்கு வங்கத்திலும் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது.


latest tamil newsதமிழகம், புதுவை கேரளா மாநிலங்களில் நேற்று சட்டசபை பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளில் 3585 ஆண்கள்; 411 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.கடந்த ஒரு மாதமாக அனைத்து வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.


latest tamil newsவேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றை மீறி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு தாராளமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.சில தொகுதிகளில் வேட்டி, சேலை, குக்கர் என பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. பிரசாரம் ஏப்.,4 இரவு 7:00 மணியுடன் நிறைவடைந்தது.


latest tamil newsஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்தது. துணை ராணுவ வீரர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் என 1.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த 4.50 லட்சம் ஊழியர்கள் பயிற்சி முடிந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு நேற்று முன்தினமே சென்றனர்.மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்து 937 ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 30 சட்டசபை தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 பேர் ஓட்டளிப்பதற்காக 1558 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.ஓட்டுச்சாவடியை சுற்றி 100 மீட்டர் துாரத்திற்குள் எந்த வாகனமும் செல்லாமல் இருக்க சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு வெளியே கட்சியினர் அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் காலை 6:30 மணிக்கெல்லாம் மக்கள் ஆர்வமாக வந்து வரிசையில் நிற்கத் துவங்கினர். சுகாதாரப் பணியாளர்கள் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து உள்ளே அனுமதித்தனர்.வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களுடன் முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் ஓட்டுச்சாவடி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு ஓட்டுச்சாவடியில் வழங்கப்பட்டது. கைகளை சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினி ஓட்டுப் போடும் வலது கைக்கு பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது.பெரும்பாலான ஓட்டுச் சாவடிகளில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

சில ஓட்டுச்சாவடிகளில் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது. ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் ஓட்டளிக்க வந்ததால் காலை 9:00 மணிக்கு 13.80 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அடுத்து 11:00 மணிக்கு 26.29; மதியம் 1:00 மணிக்கு 39.61; மாலை 3:00 மணிக்கு 53.35; 5:00 மணிக்கு 63.60 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.மாநிலத்தில் பெரிய அளவில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.இரவு 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. அதன்பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

தமிழகத்தில் தோராயமாக 72.78 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓட்டுப்பதிவு குறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: இரவு 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து அனுப்பும் பணியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே முழுமையாக ஓட்டுப்பதிவு விபரம் வரவில்லை. தோராய ஓட்டுப்பதிவு விபரம் வந்துள்ளது. அதன்படி 72.77 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 83.92 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதம்ஓட்டுகள் பதிவாகின. இந்த சதவீதம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. நாளை ஓட்டுப்பதிவு ஆய்வு செய்யப்படும்.ஆய்வின்போது ஏதேனும் தவறு கண்டறியப்பட்டு தேர்தல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்தால் அந்த ஓட்டுச்சாவடியில் மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். ஓட்டுப்பதிவின்போது சிறிய சிறிய பிரச்னைகள் வந்தன. பெரிய சம்பவங்கள் எதுவும் கிடையாது. அனைத்து இடங்களிலும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

ஓட்டுப் பெட்டியை துாக்கி சென்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை.பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு கலைக்கப்படும். இன்று முதல் பணம் பறிமுதல் இருக்காது. ஓட்டு எண்ணிக்கை மையங்கள் 75 உள்ளன. அங்கு துணை ராணுவ வீரர்கள் ஆயுதப்படை போலீசார் மாநிலப் போலீசார் என மூன்று கட்ட பாதுகாப்பு போடப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எவ்வித தவறும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.


குமரியில் 69 சதவீதம்கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல், நேற்று நடந்தது. இந்த தொகுதியில், 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று நடந்த ஓட்டுப்பதிவில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், 69 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.


174 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நவீன ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் எந்த சின்னத்திற்கு ஓட்டு என்பதை பார்க்கும் வசதி கொண்ட வி.வி.பி.ஏ.டி. இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
ஓட்டுப்பதிவு துவக்கத்தில் சில ஓட்டுச் சாவடிகளில் பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தமிழகம் முழுதும் புகார் காரணமாக 174 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 134 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்; 559 வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்கள் மாற்றப்பட்டு வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


கேரளா, அசாம், மே.வங்கத்தில் ஓட்டுப் பதிவு எவ்வளவு?
கேரளா


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 140 தொகுதிகளுக்கு, நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், 73.58 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பகலில் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது. மதியத்துக்குப் பின், பரவலாக மழை பெய்ததால், ஓட்டுப் பதிவில் தொய்வு ஏற்பட்டது. இந்தத் தேர்தலில், மொத்தம், 957 பேர் போட்டியிடுகின்றனர்.


அசாம்முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள அசாமுக்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு, 12 மாவட்டங்களில் உள்ள, 40 தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டமாக, நேற்று தேர்தல் நடந்தது.ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர, மாநிலம் முழுதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மொத்தம், 82.28 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

பல ஓட்டுச் சாவடிகளில், முதலில் ஓட்டுப் போட வந்தவர்களுக்கு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் முதியோருக்கு, அசாமில் பிரபலமான, 'கமோசாஸ்' சால்வை பரிசாக வழங்கப்பட்டது.


மே.வங்கம்முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ள மேற்கு வங்கத்துக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய இரண்டு கட்டங்களைப் போலவே, நேற்று நடந்த மூன்றாம் கட்டத் தேர்தலிலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.இரண்டு பெண்கள் உட்பட, ஐந்து வேட்பாளர்கள், மாற்றுக் கட்சியினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள, 294 தொகுதிகளில், 30 தொகுதிகளில், நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. வன்முறைச் சம்பவங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மொத்தம், 77.68 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.''ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதாரவாக, மத்தியப் படைகளும், தேர்தல் கமிஷனும் செயல்படுகின்றன,'' என, மம்தா பானர்ஜி மீண்டும் குற்றஞ்சாட்டினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-202100:02:17 IST Report Abuse
Mani . V இப்படி பொசுக்குன்னு உண்மையை சொன்னா அடித்து விளையாடும் டீமுக்கு எவ்வளவு சிரமம்? இந்த பர்சென்டேசுக்குள் வருவது மாதிரி கணக்கு போடணும். முன்பு போட்டு வைத்துள்ள கூட்டல் தொகையினை மாற்றம் செய்யோணும். இருந்தாலும் இருபத்தி ஐந்து நாட்கள் இருக்கிறது. தாராளமாக போதும்.
Rate this:
Cancel
07-ஏப்-202119:05:50 IST Report Abuse
உண்மை மிகவும் மகிழ்ச்சி. பிரபலங்கள் ஓட்டுப் போடும் செய்திகளை ஆர்வமுடன் படங்களுடன் ஒலிபரப்பும் ஊடகங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஓட்டுக்கும் பின்னால் எவ்வளவு அரசு ஊழியர்கள் உழைப்பு உள்ளது என்று யாராவது ஒலிபரப்பு செய்தார்களா? தேர்தல் தேதி அறிவிப்பு தொடங்கியது முதல் எத்தனையோ அதிகாரிகள்,ஊழியர்கள் பசி, தூக்கம் எதுவும் பாராமல் உழைத்து உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கீழ் எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டு சிறப்பாக அமைதியாக தேர்தலை நடத்தி முடித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் பாராட்ட அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் மனம் வரவில்லையே‌. தினமலரில் அதிகாரிகள், ஊழியர்கள் நலன்பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202117:48:39 IST Report Abuse
SAPERE AUDE இது எதிர்பார்த்த ஓட்டு பதிவுதான். 20 சதவீதமக்கள் இடமாற்றம் செய்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X