திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. மிக குறைந்த இடத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதாகி, உடனுக்குடன் சீரமைக்கப்பட்டது.காலை 7:00 மணிக்கு முன்பாகவே, திருப்பூர் மாவட்டத்தின், ஓட்டுச்சாவடிகளில், வரிசையாக வாக்காளர்கள் காத்திருக்க துவங்கிவிட்டனர்.
'வெயில் கொளுத்த துவங்கிவிடும்; ஓட்டுரிமையை பிறரிடம் பறிகொடுத்துவிடக்கூடாது' என்ற எண்ணத்தில், காலை 8:00 மணிக்கு முன்பாகவே, தங்கள் ஓட்டுரிமையை செலுத்திவிட்டனர்.சமூக இடைவெளி மாயம்முக கவசமும், சமூக இடைவெளியும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துதலும், கொரோனா அச்சம் ஏற்படுத்திய புதிய 'கலாசாரம்'.'மாஸ்க் போட்டுட்டு வர்லியா... போட்டுக்குங்க' என்று ஓட்டுச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்காளரிடமும் எச்சரிக்கை மணி ஒலித்தார்கள், அலுவலர்கள்; வட்டங்களை வரைந்து வைத்தாலும், சமூக இடைவெளியோ மாயமாகித்தான் போயிருந்தது.
'ஆபீசருங்க வந்தா எங்களை சத்தம் போடுவாருங்க' என்பதோடு, ஓட்டுச்சாவடி ஊழியர்களின் எச்சரிக்கையும் நின்றுவிட்டது.கடுமையான போட்டிமாவட்டத்தில் எட்டு தொகுதிகளுமே, கடும் போட்டி நிலவுபவையாக இருந்தன. தங்கள் கட்சி வேட்பாளருக்கான ஓட்டை எந்த வகையிலும் இழந்துவிடக்கூடாது என்ற அக்கறை முகவர்களில் துவங்கி, ஓட்டுச்சாவடிக்கு 200 மீ., தொலைவில் நின்று, 'எங்க சின்னத்தை மறந்துடாதீங்க' என்று கூவிய தொண்டர்கள் வரை, அந்தந்த கட்சியினரிடம் ஆர்வம்.
தலைவர்கள் பிரசாரம், ஆள் சேர்ப்பு, உரக்க ஒலித்த வாக்குறுதிகள், எதிர்வினையாற்றிய விமர்சனங்கள்... கடந்த ஒரு மாதமாகவே, கட்சியினரிடம் உழைப்பு... உழைப்பு... உழைப்பை தவிர வேறேதும் தென்படவில்லை. 'ஒரு ஓட்டுலயாவது ஜெயிச்சரணும்ங்க... தோத்தா அடுத்த அஞ்சு வருஷத்துல என்ன நடக்கும்னு அரசியல்ல சொல்ல முடியாதுங்க' என்று, பிரதானக் கட்சி வேட்பாளர்கள் கூட, மனம் திறக்கின்றனர்.
சண்டை இல்லைகடும் போட்டி இருந்தால் என்ன... மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகள் முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் நிற்கத் தேவையே இல்லைதான் போலிருந்தது. வெவ்வேறு கட்சியினர் குவிந்திருந்தாலும், பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பதில் துவங்கி, கட்சி பிரமுகர்களிடம் நாகரிக குறைவென்பதே இல்லை. சச்சரவுகளும், சண்டைகளும் அரிதான விஷயமாக தான் தெரிந்தது.
சவால் மிக்க பணிகொரோனா பரவல் அச்சம் இருந்தாலும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள், துணை ராணுவத்தினர் என ஒவ்வொருவரின் பணியும் மகத்தானது; கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இருந்ததால், அனைவருக்கும் பணிச்சுமை அதிகம். அதிகாலை 4:00 மணிக்கெல்லாம் எழுந்து நேற்று நள்ளிரவு தாண்டியும் சளைக்காமல் பணிபுரிந்தனர்.ஜனநாயக கடமையாற்றிய ஒவ்வொருவருக்கும், பிசகில்லாமல் தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கும் 'சபாஷ்' சொல்வது, நமது கடமை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE