கோவை:கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், நேற்று அசம்பாவிதம் எதுவும் இன்றி நடந்து முடிந்தது. அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கி நடந்தது. ஓட்டுச்சாவடிகளை, மாவட்ட கலெக்டர் நாகராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.மத்திய தேர்தல் பார்வையாளர்களும் ஆய்வு செய்தனர்.
ஓட்டுப்பதிவு விவரத்தை சேகரித்து, உடனுக்குடன் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்துக்கும், மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்ப, கலெக்டர் அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.இவர்கள், நேற்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது முதலே, ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஓட்டுப்பதிவு சதவீதம் விவரங்களை, சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.தேர்தல் ஆணைய உத்தரவுபடி, மாவட்டத்தில் தொகுதிக்கு ஒன்று வீதம், பெண்களே பணியாற்றும் மாதிரி ஓட்டுச்சாவடிகள், வண்ணமயமாக அமைக்கப்பட்டிருந்தன.தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட, செல்வபுரம் மதர்லேண்ட் மெட்ரிக் பள்ளியில் வாழை மரம், தோரணங்கள், பலுான் கட்டி சுப காரியம் நடப்பது போன்று, ஓட்டுச்சாவடி அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஓட்டுச்சாவடியை பொது பார்வையாளர் கோபால் மீனா பார்வையிட்டு, 'செல்பி' எடுத்துக் கொண்டார்.மின்னணு ஓட்டு இயந்திரம் பழுதாகும் புகார், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தது.
சில இடங்களில் ஓட்டுக்கு பணம், டோக்கன் கொடுப்பதாக எழுந்த புகார், தொண்டாமுத்துார் தொகுதியில் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதல் தவிர, மாவட்டத்தில் வேறெங்கும் அசம்பாவிதம் நடக்கவில்லை.மாவட்டத்தில் பதட்டம் மிகுந்த ஓட்டுச்சாவடிகள், மாநில அளவில் கவனத்தை ஈர்த்த தொகுதிகள் இருந்தும், பிரச்னையின்றி தேர்தல் முடிந்ததால், அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE