கோவை:பிளஸ் 1 நுழைவுத்தேர்வு நடத்த கல்வித்துறை அனுமதி அளிக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டை போல, தற்போதும் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.ஆனால், நடப்பாண்டில் பள்ளியளவில் எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால், மதிப்பெண்கள் கணக்கிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டு, பத்தாம் வகுப்புக்கான பாடத்திட்டத்திற்கு மதிப்பீடு செய்தாலும், குழப்பம் ஏற்படும். இதனால், 'பாஸ்' என மட்டும் குறிப்பிட்டு, மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என்ற கருத்து எழுந்துள்ளது.ஆனால், இதுபோன்ற குழப்பங்களுக்கு, கல்வித்துறையில் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில், சில தனியார் பள்ளிகள், பிளஸ் 1 நுழைவுத்தேர்வு நடத்த தயாராகிவிட்டன.கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, தங்களது பள்ளியிலேயே, பிளஸ் 1 சேர்க்க முடியாது என தெரிவிப்பதால், பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கல்வித்துறையின் உத்தரவை மீறி, ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட்டு, வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுமாறு, தெரிவிப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, ''கல்வித்துறை உத்தரவை மீறி, பள்ளி நிர்வாகம் செயல்பட கூடாது. பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண்கள் மதிப்பிடுவது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. ''இதற்கிடையில், பிளஸ் 1 சேர்க்கை துவங்க கூடாது. இதுபோன்ற புகார்களை, பெற்றோர் டவுன்ஹாலில் உள்ள, எனது அலுவலகத்தில் தெரிவிக்கலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE