மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தொகுதியில், ஓட்டு பதிவு துவங்கும் போது, மூன்று இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சராசரி அரை மணி நேரம், ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் சட்டசபைத் தொகுதியில், 413 ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, ஆதிமாதையனூரில் உள்ள, 229 ஏ, ஓட்டுச்சாவடியில், மின்னணு ஓட்டுப்பதிவு துவங்கிய போது, திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, ஓட்டு பதிவாகவில்லை.இதுகுறித்து, மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், 229 எண், ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட வந்தார்.தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மண்டல அதிகாரிகள் வந்து, பழுதை சரிசெய்ய முயன்றும் பலன் அளிக்கவில்லை. மாற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம், 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.இதே போன்று, மேட்டுப்பாளையம் சி.டி.சி., டெப்போ எதிரே உள்ள அன்னை வேளாங்கண்ணி நர்சரி பள்ளியில், 86வது ஓட்டுச்சாவடியிலும், பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூர் துவக்க பள்ளியில், எண். 282 வது ஓட்டுச்சாவடியிலூம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு இடங்களிலும், சராசரி அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE