திருச்சி:துறையூர் தொகுதியை சேர்ந்த ஆண் வாக்காளர், தன் வாக்காளர் அடையாள அட்டையில், பெண் போட்டோ இருந்ததால், 35 கி.மீ., துாரத்தில் உள்ள மலை கிராமத்திற்கு சென்று ஓட்டளித்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியில் உள்ள, துறையூர் நகராட்சி, ஏழாவது வார்டைச் சேர்ந்தவர் நடராஜ், 37. நேற்று காலை இவர், செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஓட்டு போடச் சென்றார். அங்கு, வாக்காளர் பட்டியலில், அவரது குடும்பத்தினர் பெயர்கள் இருந்தன. அவர் பெயர் இல்லை.
அருகில் இருந்த, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, அங்கும் அவர் பெயர் இல்லை. இதையடுத்து, மொபைல் ஆப் மூலம் தேடியபோது, அவரது ஓட்டு, பச்சமலை டாப் -செங்காட்டுப்பட்டி, அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் இருப்பது தெரிந்தது. தன் பெயர் அங்கு எப்படி வரமுடியும் என குழப்பம் அடைந்தார்.
ஆயினும், தன் ஓட்டை போடுவதில் உறுதியாக இருந்த நடராஜ், 35 கி.மீ., துாரம் காடுகளை கடந்து, பச்சமலை டாப் செங்காட்டுப்பட்டி சென்றார்.அங்கு, கட்சியினர் வைத்திருந்த வாக்காளர் பட்டியலை வாங்கி பார்த்தபோது, அதில் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், பெயர் உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருந்தன.
ஆனால், தன் போட்டோவுக்கு பதில் ஒரு பெண்ணின் போட்டோ இருந்தது கண்டு, அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியுடன் ஓட்டுச்சாவடிக்குள் சென்றவர், தன் அடையாள அட்டையை காண்பித்தார். அனைவரும் ஏற இறங்கப் பார்த்தனர். அங்கு இருந்தவர்களிடம் நடந்த விபரங்களை சொன்னார்.
பின், ஓட்டு போட்டு, வெளியில் வந்தார்.நடராஜ் கூறியதாவது: என் ஓட்டு சம்பந்தமே இல்லாமல், பச்சமலையில் இருப்பதை அறிந்து அதிர்ந்தேன். சிரமப்பட்டு அங்கு சென்றால், என் போட்டோவிற்கு பதில் ஒரு பெண்ணின் போட்டோ இருந்தது. ஒருவழியாக தேர்தல் அலுவலர்களிடம் பேசி, ஓட்டு போட்டு விட்டேன். திருப்தியாக உள்ளது. அலைச்சல் பெரிதாக தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE