சென்னை :ஜனநாயக கடமை ஆற்றுவதில், திரை யுலகினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில், முதல்வர் பதவிக்கு ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி கடைசி நேரத்தில் ஒதுங்க, நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் சார்பில், முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.இந்த முறை தான், சீமான், குஷ்பு, உதயநிதி, ஸ்ரீப்ரியா, சினேகன், மன்சூர் அலிகான் என, திரையுலகினர் பலர், எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
![]()
|
தேர்தல் நாளான நேற்று காலை முதலே, திரையுலகினர் ஓட்டளிப்பதில் மும்முரம் காட்டினர். அதிகாலையிலேயே ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டோர் குடும்பத்துடன் ஓட்டளிக்க வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன், உதயநிதி, விஜய் சேதுபதி, சூரி, தேவயானி, சிபிராஜ், நமீதா, குஷ்பு, சினேகா, பிரசன்னா, கீர்த்தி சுரேஷ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஓட்டு போட்டனர்.
மேலும், விஜய் ஆன்டனி, கருணாகரன், சித்தார்த், நாசர், அருண் விஜய், இயக்குனர்கள் ஷங்கர், டி.ராஜேந்தர், சீனு ராமசாமி, நாடக நடிகர் எஸ்.வி.சேகர் என, பலரும் வரிசையில் நின்று ஓட்டளித்து விட்டு, ஜனநாயக கடமை ஆற்றியதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சிந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டளித்து சென்றார்.
சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜய்
ஓட்டுச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜயால், நீலாங்கரை ஓட்டுச்சாவடி பரபரப்புக்கு உள்ளானது.சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் வசிக்கும் நடிகர் விஜய், வீட்டில் இருந்து, கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, முக கவசத்துடன் சைக்கிளில் வந்தார்.
போலீஸ் பாதுகாப்புடன், ரசிகர்கள் புடை சூழ வந்த விஜயுடன், 'செல்பி' எடுக்க, அவரது ரசிகர்கள், 'பைக்'கில் பின்தொடர்ந்தனர்.ஓட்டு போட்ட பின், ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், விஜய், ரசிகர் ஒருவரது பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து, வீட்டுக்கு புறப்பட்டார். ரசிகர்களை கலைக்க, போலீசார் லேசான தடியடி நடத்தினர்.விஜயின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'விஜய் ஓட்டு போட சைக்கிளில்போனதற்கு, ஒரே காரணம் தான். ஓட்டுச்சாவடி, அவரது வீட்டின் பின் பகுதியில் இருந்தது. 'தவிர, அத்தெருவில், கார் நிறுத்தும் அளவுக்கு வசதியும் இல்லை. அதனால் தான், விஜய் சைக்கிளில் சென்றார். மற்றபடி, எந்த காரணமும் இல்லை' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE