கரூர்:கரூர் தொகுதியில் பட்டு புடவை, வெள்ளி கொலுசு மட்டுமின்றி, பரிசு டோக்கன் என, அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், மாறி மாறி வினியோகம் செய்தனர்.
கரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க.,வில் செந்தில்பாலாஜி போட்டியிடுகின்றனர். திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவில், கரூர் தொகுதியில் பண பட்டுவாடா துாள் பறந்தது.அ.தி.மு.க.,வினர் ஓட்டுக்கு, 3,000, தி.மு.க.,வினர், 2,000 ரூபாய் வழங்கினர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்தனர்.
'க்யூ ஆர் கோட்'
இதுமட்டுமின்றி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 5,000 ரூபாய் உதவித்தொகை தருவதாக, 'க்யூ ஆர் கோட்' அச்சிடப்பட்ட டோக்கன் வினியோகமும் சில இடங்களில் நடந்தது. அ.தி.மு.க.,வினர், குறிப்பிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக பட்டு புடவைகளை வினியோகம் செய்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 73வது பிறந்த நாள் விழா என்ற பெயர் பொறித்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
'தேர்தல் முடிந்த பின், 1 கிராமம் தங்கம், 2,000 ரூபாய் அளிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முழுதும் இரண்டு கட்சியினரும் மாறி, மாறி டோக்கன் வினியோகத்தில் ஈடுபட்டனர்.தங்கக்காசு கூப்பன்நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், கொ.ம.தே.க., பொதுச் செயலர் ஈஸ்வரன், தி.மு.க., சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கட்சிகள் சார்பில், வாக்காளர்களுக்கு, 500, 1,000 ரூபாய் என வீடு, வீடாக கொடுத்துள்ளனர். மேலும், தங்க காசு டோக்கன்களும் வினியோகம் செய்துள்ளனர். தங்க காசு டோக்கன், நாமக்கல் கோட்டை சாலை மற்றும் மோகனுாரில் பல்வேறு இடங்களில், சாலையோரம் நேற்று சிதறி கிடந்தது. அவற்றை வினியோகம் செய்தது, தி.மு.க.,வா, அ.தி.மு.க.,வா என்பது புரியாத புதிராக உள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ் கூறுகையில், ''காலையில் புகார் வந்தது. இரு கட்சியினரும் மாறி, மாறி புகார் தெரிவிக்கின்றனர். விசாரிக்க சொல்லியிருக்கிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE