கிருஷ்ணகிரி:ஓட்டுச்சாவடியில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட மோதலில், பர்கூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் தாசில்தாரை, தி.மு.க.,வினர் தாக்கினர். இச்சம்பவத்தால், இரண்டு மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், காரக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட, எமக்கல்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 44 மற்றும் 45 எண் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு மொத்தம், 689 வாக்காளர்கள் உள்ளனர். மதியம், 2:00 மணி வரை, 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு, தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட இருப்பதாக கிடைத்த தகவல் படி, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அங்கு வந்துள்ளார்.
அப்போது, தி.மு.க., -- அ.தி.மு.க.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, எம்.எல்.ஏ., ராஜேந்திரனை தாக்கி, அவரது கார் கண்ணாடியை, தி.மு.க.,வினர் உடைத்ததோடு, அங்கு பணியில் இருந்த, பர்கூர் தாசில்தார் சண்முகத்தையும், சரமாரியாக தாக்கினர். எஸ்.பி., பண்டிகங்காதர் மற்றும் தபால் ஓட்டு சிறப்பு அதிகாரி சாந்தி, நேரில் சென்று பேச்சு நடத்தினர். பிற்பகல், 2:30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
நிலைமை சீரானவுடன் ஓட்டுப்பதிவு, 4:30 மணிக்கு மீண்டும் துவங்கியது.பர்கூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமியிடம், தி.மு.க.,வினர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், எமக்கல்நத்தம் ஓட்டுச்சாவடியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE