கோவையில் வேட்பாளர் காரை முற்றுகையிட்டு தாக்குதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் வேட்பாளர் காரை முற்றுகையிட்டு தாக்குதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

Added : ஏப் 07, 2021
Share
கோவை:கோவையில் தி.மு.க., வேட்பாளர் காரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை, தொண்டாமுத்துார் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, தி.மு.க., சார்பில், கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை செல்வபுரம் பகுதியிலுள்ள ஒரு ஓட்டு சாவடியை பார்வையிட காரில் சென்றார். அப்போது இவரது காரை
 கோவையில் வேட்பாளர் காரை முற்றுகையிட்டு தாக்குதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

கோவை:கோவையில் தி.மு.க., வேட்பாளர் காரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை, தொண்டாமுத்துார் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, தி.மு.க., சார்பில், கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை செல்வபுரம் பகுதியிலுள்ள ஒரு ஓட்டு சாவடியை பார்வையிட காரில் சென்றார். அப்போது இவரது காரை மறித்த நபர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரது காரை நகர விடாமல் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, அவர் வேறு ஒரு காரில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால், அந்த காரையும் பின்தொடர்ந்து ஓடியவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, அவரது காரை தாக்க துவங்கினர். இவர்களை பின்தொடர்ந்து ஓடிய போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் செல்வபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க., வேட்பாளரை முற்றுகையிட்டு காரை தாக்கியதை அறிந்த தி.மு.க.,வினர் தொண்டாமுத்துார் உள்பட பல்வேறு இடங்களில் கட்சி கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின், சம்பவம் குறித்து, மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தி.மு.க., வேட்பாளர் புகார் அளித்தார். தன்னை செல்வபுரம் பகுதியிலுள்ள பள்ளியில் வைத்து சிறை பிடிக்க முயன்றதாக அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் மீது புகார் அளித்தார்.கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், ''கோவையில் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். கூட்டம், கூட்டமாக மக்கள் வருவது மாற்றத்துக்கான அறிகுறியாகதெரிகிறது. அ.தி.மு.க.,வினர் தோல்வி உறுதியாகிவிட்டதால் வன்முறையில் இறங்கியுள்ளனர். என்னை செல்வபுரம் பள்ளியில் வைத்து சிறைப்பிடிக்க முயன்று தாக்கினர். போலீசார் முன்னிலையிலேயே கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொண்டாமுத்துார் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X