திருநெல்வேலி:பாபநாசம் வனப்பகுதியில், இஞ்சிக்குழியைச் சேர்ந்த மக்கள், 20 கி.மீ., துாரம் நடந்து சென்று, ஓட்டளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் காரையார் அணைக்கு மேல், பொதிகை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளன. அங்கு, காரையாறு, சின்னமயிலாறு, பெரியலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகளில், பழங்குடியினரான காணியின மக்கள் வசிக்கின்றனர். தேன் எடுத்தல், கிழங்குகள் விளைவித்தல் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பாபநாசம் மேலணையில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில், இவர்களுக்கான ஓட்டுச்சாவடி உள்ளது. இஞ்சிக்குழியில் இருந்து, 21 பேர், 20 கி.மீ., வனப்பகுதியில் நடந்து வந்து ஓட்டளித்தனர். கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:வனப்பகுதி மக்கள், புதன், சனிக் கிழமைகளில், காரையாறு ரேஷன் கடைக்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவர். அப்போது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தினோம்.
எனவே, அந்த மக்கள், இவ்வளவு துாரம் நடந்து வந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். மணிமுத்தாறு மலைக்கு மேல் உள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களும் முழுமையாக ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தாசில்தார் வெங்கட்ராமன் கூறும்போது, ''மேலணை ஓட்டுச்சாவடியில், 435 ஓட்டுகள் உள்ளன. இவை பெரும்பாலும் காணியினத்தவர் ஓட்டுகள் தான். நேற்று, 182 ஆண்கள், 175 பெண்கள் என, 357 பேர் ஓட்டு போட்டனர்,'' என்றார்.3 கி.மீ., நடை பயணம்நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதியில், பல பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் நேற்று காலை முதல், ஆர்வத்துடன் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் ஓட்டுச்சாவடி மையத்திற்கு, புதுக்காடு கோழிக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குரும்பர் இன ஆதிவாசி மக்கள், வனப்பகுதியில், 3 கி.மீ., நடந்து சென்று ஓட்டளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE