தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் தொகுதி சட்டசபை தேர்தலில் 5,51,994 ஆண்கள், 5,73,446 பெண்கள், 198 இதரர் என மொத்தம் 11,25,638 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றனர்.
போடி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் தங்க தமிழ் செல்வனும், கம்பம் தொகுதியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையது கான், அவரை எதிர்த்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன், தி.மு.க வேட்பாளர் மகாராஜன், பெரியகுளத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகன், தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் உட்பட நான்கு தொகுதிகளிலும் மொத்தம் 74 பேர் களத்தில் உள்ளனர்.
1651 ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. துவக்கத்தில் மந்தமாக இருந்தது.நேரம் ஆக ஆக ஓட்டுப்பதிவில் விறுவிறுப்பாக சதவீதம் அதிகரித்தது. பெரியகுளம் தொகுதி வடபுதுப்பட்டி இந்து முத்தாலம்மன் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி, முன்னாள் கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஒட்டுப்பதிவு விபரங்கள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை சேகரிக்கப்பட்டது. இதில் காலை 9:00 மணி நிலவரத்தில் 4 தொகுதிகளிலும் 24.03 சதவீதம் பதிவானது.
காலை 11:00 மணிக்கு 41.79 சதவீதமாக உயர்ந்தது.இறுதியாக இரவு 7:00 மணி நிலவரப்படி ஆண்டிபட்டி தொகுதியில் 73.96 சதவீதமும், பெரியகுளம் (தனி) 69.83 சதவீதமும், போடியில் 73.66 சதவீதமும், கம்பத்தில் 69.57 சதவீதமும் என மொத்தம் சராசரியாக 71.72 சதவீத ஓட்டுப்பதிவு ஆனது. தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக முடிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE