பெரியகுளம் : பெரியகுளத்தில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. சில இடங்களில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வீடுதோறும் வழங்கப்படாததால் ஓட்டுச்சாவடியில் சிறிது நேரம் தாமதம் ஆனது.
பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 2,84,617. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. 9 மணி நிலவரப்படி 7.74 ஓட்டுப்பதிவும், 11 மணி நிலவரப்படி 20.22, 1 மணி நிலவரப்படி 44.97, மதியம் 3 மணி நிலவரப்படி 54.66 என ஓட்டுச்சதவீதம் படிப்படியாக உயர்ந்தது. பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளில் பெரும்பாலானவற்றில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வீடுதோறும் வழங்கப்படாததால், ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் திணறினர்.
சில வாக்காளர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, சீட்டுகளை கொண்டு வந்தனர். பெரியகுளம் தென்கரை செவன்த்டே பள்ளியில் ரவீந்திரநாத் எம்.பி., பெரியகுளம் (தனி) தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகன், டி.கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், தி.மு.க., வேட்பாளர் சரவணக்குமார் கீழவடகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் ஓட்டளித்தனர்.
மறியல்: பெரியகுளம் புத்தர் நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்காததை கண்டித்தும், சின்னங்களை அழுத்தினால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டு விழுவதாக கூறி பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் 10 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE