என் கடமை; என் உரிமை! முதல் ஓட்டு பதிவு செய்த இளம் வாக்காளர்கள் மகிழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

என் கட'மை'; என் உரி'மை'! முதல் ஓட்டு பதிவு செய்த இளம் வாக்காளர்கள் மகிழ்ச்சி

Added : ஏப் 07, 2021
Share
* சுயமாக சிந்தித்து ஓட்டளித்தேன்- எஸ்.அங்கு கவுசிகா 21, கல்லுாரி மாணவி, திண்டுக்கல்.வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றதில் இருந்து எப்போது தேர்தல் வரும் என காத்திருந்தேன். யாரிடமும் கருத்து கேட்காமல் சுயமாக சிந்தித்து ஓட்டளிக்கவே தீர்மானித்தேன். முதல் முறையாக எனது முதல் ஓட்டைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா அச்சம் இருந்தாலும்,

* சுயமாக சிந்தித்து ஓட்டளித்தேன்
- எஸ்.அங்கு கவுசிகா 21, கல்லுாரி மாணவி, திண்டுக்கல்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றதில் இருந்து எப்போது தேர்தல் வரும் என காத்திருந்தேன். யாரிடமும் கருத்து கேட்காமல் சுயமாக சிந்தித்து ஓட்டளிக்கவே தீர்மானித்தேன். முதல் முறையாக எனது முதல் ஓட்டைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா அச்சம் இருந்தாலும், தகுந்த பாதுகாப்பு வசதிகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது வரவேற்கத்தக்கது. அதனால் அச்சமின்றி மக்கள் ஓட்டளித்தனர். நான் ஓட்டளித்த வேட்பாளர் வென்றால் மகிழ்ச்சி அடைவேன்.-----

* நன்மை செய்வோருக்கே என் ஓட்டு
-சூரியா 19, இல்லத்தரசி, திண்டுக்கல்

முதல்முறையாக ஓட்டுச் சாவடிக்குச் செல்கையில் எப்படி செயல்பட வேண்டும் எனத் தெரியவில்லை. அங்கிருந்த அதிகாரிகள், போலீசார் வழிகாட்டினர். தமிழகத்தையும், தொகுதியையும் மனதில் வைத்து பிடித்த வேட்பாளருக்கு ஓட்டளித்தேன். கொரோனா காரணமாக முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். முகக்கவசம் இல்லையென்றாலும் ஓட்டுச்சாவடியிலேயே கொடுத்தனர். சானிடைசர், கையுறை பயன்படுத்தி வாக்களித்தேன். முதல்முறை ஜனநாயக கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.----

* பதற்றமாகவே இருந்தது
-- மனோசுமித்திரா 21, கல்லூரி மாணவி, ஒட்டன்சத்திரம்

முதல் முறை ஓட்டுப் பதிவு செய்யப் போகிறோம் என்பதால் பதட்டமாக இருந்தது. அதனால் ஓட்டுப் பதிவு செய்யும் முறை குறித்து முன்பே தெரிந்து கொண்டேன். ஓட்டுச்சாவடியில் எனது பாகம் எண், வரிசை எண் தகவல்களை அளிக்க வேண்டும். அவர்கள் சரிபார்த்தபின் அடையாள அட்டை காண்பித்து ஓட்டளிக்க வேண்டும் என்றனர். அதன்படியே ஓட்டைப் பதிவு செய்தேன். கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை கடைபிடித்து சென்றேன். எனது வேட்பாளரை நான் தேர்வு செய்து உள்ளேன்.----

* நல்ல வேட்பாளரை தேர்வு செய்தேன்
-சந்தியா 24, குடும்பத்தலைவி, பழநி

முதல் முறை ஜனநாயக கடமையை செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஓட்டுப் பதிவு செய்வது எப்படி எனத் தெரிந்து கொண்டேன். முதல் ஓட்டுப்பதிவில் நல்ல வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். வெகுநாட்களுக்கு பின்பு இந்த முறைதான் வாக்காளர்பட்டியலில் என் பெயர் வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நன்கு செய்திருந்ததால் ஓட்டுப்பதிவு குறித்து நான் பயப்படவில்லை. தமிழகத்திற்கு நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது.-

* தொலைநோக்கு சிந்தனை
-அ.பிராங்க்ளின்அருள் 18, கல்லுாரி மாணவர், நத்தம்

இத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முதல் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் பதட்டமின்றி முதல்முறையாக ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் வகையில் வாக்களித்துள்ளேன். முந்தைய தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையில் சில குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இந்த மின்னணு வாக்குப்பதிவு முறை எனக்கு எளிதாகவே இருந்தது.--

* நல்லாட்சி அமைய ஓட்டளித்தேன்
-ஆர்.ஜீவா 20, கல்லுாரி மாணவர், வேடசந்துார்.

ஓட்டுச் சாவடிக்குள் செல்லும் போது சற்று பதட்டமாக இருந்தது. அறைக்குள் நுழைந்தபின், நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்ற எண்ணத்தில் ஓட்டைப் பதிவு செய்து மகிழ்ச்சியுடன் நிமிர்ந்து நின்றேன். மக்களில் பலர் தங்கள் கடமை இது என்று கருதாமல் தட்டிக் கழிக்கின்றனர். நாம் அப்படி இருக்கக் கூடாது என்றெண்ணி வந்து வாக்களித்தேன். தேர்வு செய்யப்படும் ஆட்சி நல்ல முறையில் அமையவும், கொரோனா பாதிப்புகள் விலகவும், வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.--

* ஊழலற்ற நிர்வாகம் தேவை
--எஸ்.அமலாமேரி 20, கல்லுாரி மாணவி, குட்டத்துப்பட்டி:

ஜனநாயக கடமையாக, முதல் முறையாக ஓட்டளித்து எனது பதிவும் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. ஆட்சியாளர்கள் மக்களின் அடிப்படைத் தேவையை மட்டுமே இலவசமாக வழங்குவதை விரும்புகிறேன். பணச்சுமையற்ற கல்வி, தடையற்ற சுகாதாரச்சூழல், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, முறைகேடு, லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை எதிர்பார்க்கிறேன். இவற்றிற்கேற்ற செயல் திட்டங்கள் கொண்ட வேட்பாளருக்கு ஆதரவளிக்க விரும்பினேன். இளைய தலைமுறையிடம் இதற்கான எழுச்சி இருப்பதாக உணர்கிறேன்.-

* ஜெர்மனியில் இருந்து வந்தேன்
-ஏ. பிரியதர்ஷினி 25, ஆய்வு மாணவி, வத்தலக்குண்டு

பிஎச்.டி., படிப்புக்காக ஜெர்மனியில் இருக்கிறேன். பட்டபடிப்பின் போது அடையாள அட்டை இன்றி ஓட்டளிக்கவில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவித்ததால் விடுமுறையை ஓட்டுப் போடுவதற்காக மாற்றி அமைத்தேன். இந்திய தேர்தல் நடைமுறை மிகவும் பிடித்திருந்தது. யாருக்கு ஓட்டு போடலாம் என்பதை நானே முடிவு செய்தேன். மக்களுக்கு யார் நல்லது செய்துள்ளனர், இனி செய்ய போகிற கட்சி எது என்பதை வைத்து முடிவு செய்தேன். ஜெர்மனியில் இருந்து வந்து ஓட்டளித்தது சந்தோஷமாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X