மதுரை : மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக ஓட்டளித்தவர்கள் 'என் கடமை, என் உரிமை' என்பதை உறுதி செய்யும் வகையில் ஓட்டளித்தது மகிழ்ச்சி தருகிறது என்றனர்.
* மிகப்பெரிய பொறுப்பு
சிவசங்கரி, டி.ஆர்.ஓ., காலனி:
கோவை கல்லுாரியில் படிக்கிறேன். முதல் முறையாக ஓட்டு அளிக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதால் மதுரை வந்தேன். ஏதோ ஒரு பெரிய பொறுப்பு நமக்குள்ளது என நினைத்து வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன். இளைய தலைமுறையினர் எதிர்பார்ப்பது ஊழல் இல்லாத ஆட்சியே. அரசு அல்லது தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி தவருவதில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பதற்றமாக இருந்தது
துர்காதேவி, தத்தனேரி:
முதன்முறையாக ஓட்டளித்ததால் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. மின்னணு இயந்திர பட்டனை 'டச்' செய்யும் வரை குழப்பம் இருந்தது. ஒருவழியாக ஓட்டளித்துவிட்டு வெளியே வந்தபோது எதையோ சாதிக்க உணர்வு இருந்தது.
* பாதுகாப்பான அரசு
லட்சுமி, சொக்கலிங்கநகர்:
பிள்ளைமார் பள்ளியில் ஓட்டளிக்க சென்ற போது சானிட்டைஸர் தந்தனர். வெப்பநிலை பரிசோதிக்கவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான அரசு அமைய வேண்டும் என்பது தான் என் ஆசை. அதை மனதில் வைத்து என் முதல் ஓட்டை பதிவு செய்தேன்.
* எனக்கான அங்கீகாரம்
பூவிழி, கே.கே.நகர்:
முதன்முதலாக ஓட்டளிக்க போறோம். என்னென்ன நடைமுறை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பூத்திற்குள் சென்றதும் அடுத்தடுத்து வேலைகள் நடந்ததால் சில நிமிடங்களில் ஓட்டளித்துவிட்டு திரும்பினேன். எனக்கான உரிமையை கடமை தவறாமல் செய்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கான அங்கீகாரமாக முதல் ஓட்டை கருதுகிறேன்.
* பெருமையாக இருந்தது
பொன்முனி, திருமங்கலம்:
முதன் முறையாக ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மிகவும் பெருமையாக இருந்தது. மனதில் ஒரு வித சந்தோஷம். நம்மை ஆட்சி செய்து, நமக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துபவர்களை தேர்ந்தெடுக்க உரிய முறையில் வாய்ப்பை பயன்படுத்தியதில் மகிழ்ச்சி.
* புது அனுபவம்
காஞ்சனா தேவி, வாடிப்பட்டி:
எனக்கு வாக்குரிமை உள்ளதை அறிந்த கட்சியினர் என்னிடம் முதன்முறையாக வாக்கு கேட்டனர். இந்த தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களித்தவர் வெற்றிபெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது.
* நானும் இந்திய குடிமகள்
எஸ்.யோகிதா, திருநகர்
ஒருமாதமாக மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன். எப்படி ஓட்டுப்போட வேண்டும் என எனது தந்தை கூறியிருந்தார். வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் படபடப்பு அதிகமானது. எனக்குப்பிடித்த சின்னத்தில் எனது விரல் வைத்தபோது எல்லையில்லா ஆனந்தம். வெளியில் வந்தபோது நானும் இந்திய குடிமகள் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது. வித்தியாசமான அனுபவம்
* வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை
புவனேஸ்வரி, பசுமலை:கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கிறேன். தேர்தல் கமிஷன் என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் 100 சதவீத ஓட்டுப்பதிவு சாத்தியமாக வில்லை. நமக்கு கிடைத்த வாய்ப்பை ஏன் வீணாக்க வேண்டும். எனது முதல் ஓட்டும் முக்கியம் என்பதால் ஓட்டளித்தேன்.
* பொறுப்பு வேண்டும்
மகாலட்சுமி, மேலுார்:
முதல் ஓட்டு மூலம் என் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்கான பொறுப்பை தட்டிக்கழிக்காமல் ஓட்டை பதிவு செய்து சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும். அதை இத்தேர்தலில் முதன்முறையாக செய்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
* வீட்டில் பயிற்சி
சி. தமிழமுது, தொட்டப்பநாயக்கனூர்:
எப்படி ஓட்டு போடுவது என பெற்றோர் வீட்டில் விளக்கமளித்தனர். இருந்தாலும் பதட்டமாக இருந்தது. ஓட்டு சிலிப், அடையாள அட்டை, முகக்கவசம் என மீண்டும், மீண்டும் சரிபார்த்து எடுத்து வந்தேன். ஓட்டுச்சாவடிக்குள் சென்று ஓட்டளித்து வந்தது மகிழ்ச்சியான இருந்தது.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE