தேர்தல் துளிகள்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் துளிகள்...

Added : ஏப் 07, 2021
Share
அ.தி.மு.க., தி.மு.க., கைகலப்பு* காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், நகரிலும், புறநகரிலும் பல பூத்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை தாமதமானது.* மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு கல்லுாரி பூத் வளாகத்தில் ம.தி.மு.க., கொடியுடன் வாகனம் ஒன்று நின்றிருந்தது. தேர்தல் விதிமீறல் எனக்கூறி அவ்வாகனத்தை

அ.தி.மு.க., தி.மு.க., கைகலப்பு

* காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், நகரிலும், புறநகரிலும் பல பூத்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை தாமதமானது.

* மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு கல்லுாரி பூத் வளாகத்தில் ம.தி.மு.க., கொடியுடன் வாகனம் ஒன்று நின்றிருந்தது. தேர்தல் விதிமீறல் எனக்கூறி அவ்வாகனத்தை சோதனையிட்டு வெளியே அனுப்பினர்.

* பல பூத்களில் கொரோனா முன்தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவில்லை. பூத் அலுவலர்கள் பலரும் முகக்கவசமோ, கையுறையோ அணியவில்லை. முதியோர், ஊனமுற்றோருக்கு உதவ வீல்சேர்கள் இருந்தும் உதவ ஆட்கள் இல்லை.

* திருமங்கலம் ஆலம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் 4 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் வளாகத்தில் அ.தி.மு.க.,வினர் சின்னத்தை காண்பித்து வாக்காளர்கள் ஓட்டளிக்க வலியுறுத்தினர். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க, கைகலப்பு ஆனது. தென்காசி ரோட்டில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்தனர்.

* டி.கல்லுப்பட்டி அரசு பள்ளி பூத்தில் தி.மு.க., ஏஜன்ட்கள் கருப்பு, சிவப்பு துண்டு அணிந்து வந்தனர். தேர்தல் அதிகாரிகள் 'தி.மு.க., கொடியை நினைவுபடுத்துகிறது' என்றுகூறி அவர்களை வெளியேற கூற, வாக்குவாதம் ஏற்பட்டது.

* திருப்பரங்குன்றம் சுப்பையா ரத்தினம் பள்ளி பூத்தில் 131 பேர் ஓட்டளித்த நிலையில், மின்னணு இயந்திரம் பழுதானது. அரைமணி நேரத்திற்கு பின் வேறு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால் அரைமணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது.

* மதுரை வடக்கில் ரிசர்வ் லைன் ஓட்டுச் சாவடியில் முதியவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். அச்சமயம் அங்கு ஆய்வுக்கு வந்த பா.ஜ., வேட்பாளர் டாக்டர் சரவணன் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

* வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் 'ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது' என வலியுறுத்தி அவர் அணிந்த 'மாக்ஸ்க்'கில் ரூ.500ஐ ஒட்டி ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

* கோ.புதுார் பஸ் ஸ்டாண்டில் ஓட்டுச் சாவடி அமைந்துள்ள 100 மீட்டருக்குள் தி.மு.க., பா.ஜ., அ.ம.மு.க., சார்பில் மூன்று இடங்களில் சேர்கள் போட்டு நிர்வாகிகள் விதிமுறை மீறி குவிந்ததால் போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

* திருமங்கலம் தொகுதி பேரையூரில் பரதன் முத்துக்குமாரசுவாமி துவக்க பள்ளியில் ஓட்டுச் சாவடியில் ம.நீ.ம., கட்சி நிர்வாகிகள் சின்னத்துடன் ஓட்டளிக்க வந்த போது போலீசார் தடுத்ததால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

* உசிலம்பட்டி தொகுதி கீழப்புதுார் டி.இ.எல்.சி., பள்ளி பூத்திற்கு பா.பி., வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்களுடன் வந்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன், 'கூட்டமாக செல்ல வேண்டாம். வேட்பாளருடன் சிலர் மட்டுமே செல்ல வேண்டும்' எனக்கூறியதால் அவருடன் கதிரவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

* பேரையூர், மேலுார் பகுதிகளில் பூத் சிலிப் வழங்காததால் எந்த பூத் என தெரியாமல் வாக்காளர்கள் சிரமம் அடைந்தனர்.

பரிதவித்த வேட்பாளர்கள்

* மதுரை மீனாட்சி கல்லுாரி பூத்தில் அமைச்சர் செல்லுார் ராஜூ ஓட்டளிக்க வந்தபோது, விவிபேட் பழுதானது. ரசீது வெளியே தெரியாததால் அதை சரி செய்யும் வரை 'டென்ஷனுடன்' காத்திருந்தார்.

* மதுரை ஞானஒளிவுபுரம் செயின்ட் பிரிட்டோ பள்ளி பூத்தில் மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சின்னம்மாள் ஓட்டளிக்க வந்தார். அப்போது ஏற்கனவே மின்னணு இயந்திரத்தில் டெஸ்ட் செய்த ஓட்டுகளை அழிக்க அதிகாரிகள் மறந்தது தெரிந்தது. தேர்தல் அலுவலர் டெஸ்ட் ஓட்டுக்களை அழித்த பின் சின்னம்மாள் ஓட்டளித்தார்.

* தனக்கன்குளம் அரசு பள்ளி பூத்திற்குள் சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரனை தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர்களுடன் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் சஞ்சய் சின்ஹாவிடம் முறையிட, பூத்திற்குள் ராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டார்.

ஓட்டுக்கு டோக்கன்: வேட்பாளர் மறியல்

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு ஏ.பி.டி., துரைராஜ் பள்ளி பூத்திற்கு நேற்று மதியம் அ.தி.மு.க.,வினர் கொடுத்த டோக்கன்களுடன் பெண்கள் சிலர் ஓட்டளிக்க வந்தனர். சந்தேகப்பட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினர் விசாரித்தபோது அ.தி.மு.க., வட்ட செயலாளரின் மகள் ஓட்டு போட்டுவிட்டு இந்த டோக்கனை காண்பித்து நாளை பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக பெண்கள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து மா.கம்யூ., வேட்பாளர் பொன்னுத்தாய் தலைமையில் சிந்தாமணி ரோட்டில் அரைமணி நேரம் மறியல் நடந்தது. போக்குவரத்து பாதித்தது. டோக்கன் விநியோகம் செய்ததாக கருதப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜன்செல்லப்பா காரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

அதிகாரிக்கு சபாஷ்

மேலுார் வ.உ.சி., நகர் ஆனந்த்பாபு 22. பார்வையற்றவர். ஓட்டளிக்க வழிமுறை தெரியாமல் கலெக்டர் அன்பழகனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினார். கலெக்டர் உத்தரவுபடி தேர்தல் அலுவலர் ரமேஷ் உடனடியாக ஆனந்த்பாபு வீட்டிற்கு வாகனத்தை அனுப்பி ஓட்டளிக்க ஏற்பாடு செய்தார்.

தேர்தல் புறக்கணிப்பு

உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட பேரையூர் தாலுகா சூலப்புரம் ஊராட்சி உலைப்பட்டி, குன்னுவார்பட்டி வாக்காளர்கள் 1,138 பேர் உலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரு பூத்களில் ஓட்டளிப்பர். 300 வாக்காளர்கள் கொண்ட குன்னுவார்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் உள்ளதால், தனி ஓட்டுச்சாவடி கோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர். வருவாய்த் துறை மற்றும் கட்சியினர் அடுத்த தேர்தலில் ஓட்டுச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தும் ஓட்டுப்பதிவை புறக்கணித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X