புதுச்சேரி : புதுச்சேரியில் வேறு ஒருவர் தனது ஓட்டை பதிவு செய்ததால், சர்க்கார் பட பாணியில், 49 பி பிரிவின் கீழ் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டை பதிவு செய்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் குமார், 53; தனியார் நிறுவன ஊழியர். தனது குடும்பத்தினருடன், நெல்லித்தோப்பு பெரியார் நகரில் உள்ள நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அரசு உயர்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, ஓட்டளிக்கச் சென்றார்.பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்க அனுமதி கேட்டார். அப்போது, குமாரின் ஓட்டு ஏற்கனவே பதிவாகி உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தான் தற்போது ஓட்டுபோட வருவதால், தன்னை ஓட்டளித்த அனுமதிக்க வலியுறுத்தினார்.
இது குறித்து விசாரிப்பதாகவும், ஓட்டளிக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனக்கு பதிலாக வேறு ஒருவர் போட்ட ஓட்டை எப்படி நீக்குவீர்கள் என குமார் கேள்வி எழுப்பினார். ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், அதிகமாக பதிவாகி உள்ள ஒரு ஓட்டை நீக்குவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்க மறுத்த குமார், தனது ஓட்டை தவறாக பதிவானதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி, காலை 10 முதல் பகல் 12 மணி வரை காத்திருந்தார். இதனால் மற்ற வாக்காளர்களும் ஓட்டளிக்க முடியவில்லை. பகல் 12:00 மணிக்கு பிறகு, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதி 49பி பிரிவில் ஓட்டுச்சீட்டு முறையில் குமார் ஓட்டளித்துச் சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE