புதுச்சேரி : சட்டசபை தேர்தலின்போது 31 ஓட்டு பதிவு கருவி, 36 கட்டுப்பாட்டு கருவி, 113 வி.வி.,பேட் கருவிகள் மாற்றம் செய்யப்பட்டன என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 1558 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு எவ்வித அசம்பாவிமும் இன்றி அமைதியாக நடந்தது. இரவு 7.00 மணி வரை புதுச்சேரியில் 81.64 சதவீதம் ஓட்டு பதிவானது. எனினும், ஓட்டு சதவீதம், படிவம் '17-சி' சரிபார்த்த பிறகு இறுதி செய்யப்படும்.80வயது நிரம்பியவர்கள், மாற்றுதிறனாளிகள், அத்தியாவசிய பணியாளர்கள், கொரோனா நோயாளிகள் என 4529 பேர் தபால் ஓட்டு மூலம் ஓட்டு போட்டுள்ளனர்.
கடந்த 5ம் தேதி வரை, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 8333 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பாதுகாப்பு கவச உடை அணிந்து மருத்துவர் துணையுடன் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டு ஓட்டினை செலுத்தினர்.தேர்தலில் மொத்தம் 1677 ஓட்டு பதிவு இயந்திரம், 1558 கட்டுப்பாட்டு கருனி,1558 வி.வி.,பேட் பயன்படுத்தப்பட்டன.
இதில் 31 ஓட்டுப்பதிவு கருவி (1.85 சதவீதம்), 36 கட்டுப்பாட்டு கருவி (2.31 சதவீதம்), 113 வி.வி.,பேட் கருவி (7.25 சதவீதம்) ஆகியவை மாதிரி ஓட்டு பதிவு மற்றும் ஓட்டுப் பதிவின்போது மாற்றம் செய்யப்பட்டன. தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE