சென்னை : மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன், சக்கர நாற்காலி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்த போதிலும், சில இடங்களில் அவை முறையாக வழங்கப்பட வில்லை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. சென்னை புறநகரான, தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில், காலையிலேயே ஓட்டுப்பதிவு விறுவிறுப்படைந்தது. ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக, சக்கர நாற்காலிகள் தேர்தல் கமிஷனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் அவை அனுப்பட்டு இருந்தன.ஆனால், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், சக்கர நாற்காலிகள் பிற்பகல் வரை, பிரிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டன.
இந்த சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள், மற்றவர்களின் உதவியுடன் சென்று ஓட்டளித்ததை பார்க்க முடிந்தது.அதிகாரிகள் ஓட்டுப்பதிவு தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்தியதால், சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வராமல், அப்படியே வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தும், அதிகாரிகள் அலட்சியத்தால், அந்த வசதி, உரியவர்களுக்கு பயன்படாமல் போனதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE