சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை காடாய் மாறிய பல்லாவரம் நகராட்சி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சி குப்பையை, கொடுங்கையூரில் கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், துரைப்பாக்கம் சாலையில், டன் கணக்கில் குப்பை தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் தொகுதியில் நீண்ட காலமாக இந்த பிரச்னை தொடர்வதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படும், எம்.எல்.ஏ., இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சி குப்பையை, கொடுங்கையூரில் கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், துரைப்பாக்கம் சாலையில், டன் கணக்கில் குப்பை தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம் தொகுதியில் நீண்ட காலமாக இந்த பிரச்னை தொடர்வதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படும், எம்.எல்.ஏ., இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். வேங்கடமங்கலம் கிராமத்தில், புறநகர் உள்ளாட்சிகள் இணைந்து, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், உரம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தன. அங்கு, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளின் குப்பை கொட்டப்பட்டது. உரம் தயாரிக்கும் பணியை, தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. 2019ல், அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் நகராட்சிகளே, கிடங்கை பராமரித்து வந்தன. உரம் தயாரிப்பது நிறுத்தப்பட்டு, குப்பை தேக்கும் இடமாகவே பயன்படுத்தினர். நாள் தோறும், 150 டன்னுக்கும் அதிகமான மக்காத குப்பை கொட்டினர்.இதற்கிடையே, குப்பையை பிரித்து, கையாளாமல் குவித்து வைத்ததால், துர்நாற்றம் அதிகரித்து, சுற்றியுள்ள மக்கள் பாதிப்படைந்தனர். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயம், குப்பையை கையாளுவதற்கான உபகரணங்களை ஏற்படுத்தாமல், குப்பை கொட்டக்கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து, வேங்கடமங்கலத்தில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. இதனால், பல்லாவரத்தில் குப்பை கொட்ட இடமில்லாத நிலைமை ஏற்பட்டது. பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் உள்ள, குப்பை மாற்று நிலையத்தில் கொட்டினர்.பின், சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, சில மாதங்கள் பெருங்குடியிலும், சில மாதங்கள் கொடுங்கையூரிலும் கொட்டினர். திடீரென அங்கும் தடை விதிக்கப்பட்டதால், குப்பை கொட்ட முடியாமல், நகராட்சி நிர்வாகம் தவித்தது.இதையடுத்து, சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, பிப்., 6ம் தேதி முதல், கொடுங்கையூர் கிடங்கில் கொட்டினர்.

நாள்தோறும், 60 டன் மக்காத குப்பை, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டது.இதற்காக, ஒரு டன் குப்பைக்கு, 2,500 ரூபாய் என்ற கணக்கில், நாள்தோறும், 1.50 லட்சம் ரூபாயை, சென்னை மாநகராட்சிக்கு, பல்லாவரம் நகராட்சி நிர்வாகம், குப்பை கொட்டும் கட்டணமாக செலுத்தி வந்தது. முன்பணமாக, 10 லட்சம் ரூபாயை செலுத்தி, குப்பையை கொட்டினர்.இதற்கிடையில், 25 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என, சென்னை மாநகராட்சி கூறியது. அந்த பணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்தாததால், குப்பை கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் உள்ள குப்பை மாற்று நிலையத்தில், மீண்டும் குப்பை தேங்குகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக குப்பை கொட்டுவதால், டன் கணக்கில் தேங்கி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில், திடீர் திடீரென குப்பையை எரிப்பதால், சுற்றுவட்டார மக்கள், பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பல்லாவரம் நகராட்சியில், சில ஆண்டுகளாக, குப்பை பிரச்னை என்பது, தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது.சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்லாவரம் தொகுதியில் வெற்றி பெரும் வேட்பாளர், இப்பிரச்னையை முதல் கடமையாக எடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதான கட்சி வேட்பாளர்கள் உட்பட, பலரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, உறுதி அளித்திருந்தனர். வெற்றி பெறும் வேட்பாளர், வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்பதே தொகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. ''பல்லாவரம் நகராட்சி நிர்வாகம், குப்பை கொட்டுவதற்கு இடமில்லாமல் திணறி வருகிறது. எதிர்கால திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டதே இதற்கு காரணம். இத்தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர், முதல் வேலையாக, தொகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.எஸ். மீனாட்சி சுந்தரம், 66,சமூக ஆர்வலர்,குரோம்பேட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X