பல்லாவரம் : ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கைது செய்யாததை கண்டித்து, பல்லாவரம் தொகுதி, மை இந்தியா கட்சி வேட்பாளர், மொபைல் டவரில் ஏறி, போராட்டம் நடத்தினார்.
ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி, 35; தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவர். இவர், மை இந்தியா என்ற கட்சி சார்பில், பல்லாவரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.மார்ச், 17ம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்து, காரில், அனகாபுத்துார் நோக்கி சென்றார். அப்போது, அவரது மொபைல் போனிற்கு, ஒரு, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் இருந்து, ஆபாச வீடியோக்கள் வந்தன.இது சம்பந்தமாக, பரங்கிமலை துணை கமிஷனரிடம், வீரலட்சுமி புகார் கொடுத்தார்.
அந்த புகார், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆபாச வீடியோ அனுப்பிய நபர் குறித்து, விசாரித்தனர்.அதில், மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார், கேரளாவிற்கு சென்றனர். ஆனால், குறிப்பிட்ட மொபைல் எண், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதாலும், தேர்தல் பணி காரணத்தாலும், சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கண்டுபிடிக்காததை கண்டித்து, தேர்தல் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை விமான நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள மொபைல் டவரில் ஏறி, வீரலட்சுமி போராட்டம் நடத்தினார்.போலீசார் விரைந்து, பேச்சு நடத்தினர். 'சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கும் வரை, கீழே இறங்க மாட்டேன்' என, வீரலட்சுமி கூறினார். இதையடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும், டவரில் ஏறி, வீரலட்சுமியிடம் பேச்சு நடத்தினர்.அரை மணி நேர பேச்சுக்கு பின், இரண்டரை மணி நேரம் கழித்து, பகல், 11:30 மணிக்கு, வீரலட்சுமி டவரில் இருந்து கீழே இறங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE