ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், காந்திஜி நகர், வ.உ.சி.,வீதியை சேர்ந்தவர் பூர்ணிமா, 22; சி.ஏ., படிக்கிறார். தன் முதலாவது ஓட்டை, ஈரோடு கொல்லம்பாளையம் அரசு துவக்க பள்ளி மையத்தில், நேற்று பதிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறும் போது, ''முதன்முறை என்பதால் சற்று பயம் இருந்தது. யாருக்கு ஓட்டளித்தேன் என்பதை பார்த்தேன். சரியாக இருந்தது,'' என்றார். இதேபோல் ஈரோடு, கள்ளுக்கடை மேடு, ஜீவானந்தம் வீதியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் சோனியா, 23; ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், முதலாவது ஓட்டை பதிவு செய்தார். அவர் கூறும்போது, ''ஓட்டுபோடும் முறை குறித்து அறிந்து இருந்தேன். அதன்படி வந்து ஓட்டு பதிவு செய்தேன்,'' என்றார்.
விளையாடிய அணில்; தடுமாறிய மின்சாரம்: கோபி தொகுதியில், புதுக்கரைப்புதூர் புதூர், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி, வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு, சிறிது நேர தாமதத்துக்குப் பிறகு, ஓட்டுப்பதிவு தொடங்கியது. கோபி டவுன் பகுதியில், 15க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், காலை, 7:10 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. கோபி கோட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கோபி துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் இணைப்பில், அணில் நடமாடியதால், மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டது தெரிந்தது. 15 நிமிடத்தில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE