ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்தனர். பல இடங்களில் கொரோனா விதியை கடைப்பிடிக்க மறந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், எட்டு தொகுதியில், 2,741 ஓட்டுச்சாவடிகளில், 19.63 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடியில் நுழைந்ததும், வெப்பநிலை பார்க்கப்பட்டு, கிருமி நாசினி வழங்கி கை சுத்தம் செய்து, கிளவுஸ் வழங்கி, கையில் பொருத்த செய்தனர். வாக்காளர் விபரம் சரி பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பெரும்பாலான ஓட்டுச்சாவடியில், கொரோனா சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முககவசம் இன்றி ஓட்டுச்சாவடிக்கு வந்த பலருக்கு, முககவசம் வழங்கி, அறிவுரை வழங்கப்பட்டது. சில இடங்களில் தேர்தல் அலுவலர்களே, முக கவசம் முறையாக அணியவில்லை. ஒரு சில ஓட்டுச்சாவடியில், நுழைவு பகுதியிலேயே முக கவசம் அணியாமல் வந்தவர்கள் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் எட்டு தொகுதியில் காலை, 9:00 மணிக்கு, ஈரோடு கிழக்கு-9.44, ஈரோடு மேற்கு-14.4, மொடக்குறிச்சி-15.17, பெருந்துறை-15, பவானி-16.02, அந்தியூர்-10.91, கோபி-6.67, பவானிசாகர்-6.67 என, மாவட்ட அளவில், 12.45 சதவீத ஓட்டு பதிவானது. காலை, 11:00 மணிக்கு, 25.99 சதவீதம், மதியம், 1:00 மணிக்கு, 45.87 சதவீதம் பதிவானது. மதியம், 3:00 மணிக்கு, ஈரோடு கிழக்கு-53.95, ஈரோடு மேற்கு-58.16, மொடக்குறிச்சி-61.34, பெருந்துறை-55.8, பவானி-62.6, அந்தியூர்-56.25, கோபி-62.76, பவானிசாகர்-53.4 என, மாவட்ட அளவில், 58.08 சதவீத ஓட்டு பதிவானது. சில ஓட்டுச்சாவடிகளில் சிறு பிரச்னை, சில நிமிடங்கள் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டாலும், சிறிது நேரத்தில் மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வழக்கம்போல் முதல் ஓட்டு போடும், இளைஞர், இளம்பெண்கள் அதிக ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்தனர். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், நிழல் தருவதற்கு ஷாமியானா அமைக்கப்பட்டதால், கொளுத்திய மதிய வேளையிலும் கூட்டம் காணப்பட்டது.
வெயிலால் மந்தம்: பவானிசாகர் (தனி) சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி எண், 220ல் கோளாறு காரணமாக மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதித்தது. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு மேல் வெயில் கொளுத்தியதால், 3 மணிவரை ஒரு சில இடங்களில், ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது.
கிழக்கு தொகுதியில் 40 நிமிடம் நிறுத்தம்: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, ஈரோடு, கருங்கல்பாளையம் நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓட்டுசாவடி மையம் அருகில், அரசியல் கட்சியினர், எல்லை கோட்டை கடந்து, ஓட்டு கேட்பதாக, வாக்காளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். போலீசார் அங்கிருந்தவர்களை வெளியேற சொல்லவில்லை. இதையடுத்து மதியம், 2:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. 200 மீட்டர் தூரத்தில் நின்றிருந்தவர்களை, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். பிரச்னை முடிவுக்கு வந்த பின், 2:40 மணிக்கு மீண்டும் துவங்கி நடந்தது.
'விவிபேட்' பழுதால் 45 நிமிடம் தாமதம்: மொடக்குறிச்சி யூனியன், புஞ்சைகாளமங்களம், சாணார்பாளையம் ஊ.ஒ.தொ., பள்ளி, ஓட்டுச்சாவடி மையத்தில், 80வது எண் ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு தொடங்கி, ஒன்பது பேர் மட்டுமே ஓட்டு பதிவு செய்த நிலையில், 7:15 மணிக்கு 'விவிபேட்' இயந்திரம் பழுதானது. அலுவலர்கள் சரி செய்ய முயன்றனர். முடியாத நிலையில், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின் இயந்திரம் மாற்றப்பட்டது. இதனால், 8:00 மணியளவில், 45 நிமிட தாமதத்துக்குப் பிறகு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
பட்டியலில் பெயர் மாயம்; 27 பேர் சாலை மறியல்: அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என, 27 பேர், எண்ணமங்கலத்தில் நேற்று மதியம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார், தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள், 27 பேரும் கடந்த தேர்தல்களில் ஓட்டு போட்டோம். இப்போது வாக்காளர் பட்டியலில், எங்கள் பெயர் வரவில்லை. ஓட்டு போட எங்களை அனுமதிக்க வேண்டும் என்றனர். தற்போது முடியாது, அடுத்த தேர்தலில்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர்.
இரு கட்சியினரால் சத்தியில் சலசலப்பு: பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட, சத்தியமங்கலம், வடக்குபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் சிவக்குமார், 12:30 மணி அளவில், 100 மீ., எல்லைக்கோட்டை கடந்து வந்து ஆதரவு திரட்டினார். இதற்கு, அ.தி.மு.க.,வினர், எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது. பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி, ஐந்து நிமிடத்தில் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE