சேலம்: மூன்று சக்கர நாற்காலி, 'மக்கர்' ஆனதால், முதியவர்கள் தவிப்புக்கு ஆளாகினர். தாரமங்கலம், செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில், நான்கு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு, பெரியாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி, 75, 'வாக்கர்' உதவியுடன், தாங்கியபடி ஓட்டுப்போட வந்தார். அவரை, ஓட்டுச்சாவடிக்குள் அழைத்து செல்ல, போதிய தன்னார்வலர் இல்லை. பின், தாமதமாக கொண்டு வரப்பட்ட, 3 சக்கர நாற்காலியில், முதியவர் அமர்ந்தபோது, இடதுகால் பாதம் வைக்கும் கட்டை பெயர்ந்து விழுந்து விட்டது. அதனால், வலது பாத கட்டையில், இரு கால்களையும் வைத்துக்கொண்டார். அதேநேரம், அங்கு தேர்தல் பார்வையாளருடன் வந்த உதவியாளர், சக்கர நாற்காலியின், பாத கட்டையை சரி செய்து கொடுத்த பின், முதியவர் ஓட்டுப்போட அழைத்து செல்லப்பட்டார். அவர், வெளியே வந்த பின்பே, அடுத்த முதியவர் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டார். அதுவரை, முதியவர்கள் சிலர், காத்திருந்து ஓட்டுப்போட்டு சென்றனர். இதேநிலை, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் காணப்பட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, 1,363 சக்கர நாற்காலிகள் போதுமானதாக இல்லை. அதில், பெரும்பாலான நாற்காலிகள், பயன்படுத்த முடியாத அளவு மோசமாக இருந்ததால், முதியோர், மாற்றுத்திறனாளிகளை, ஓட்டுச்சாவடிக்குள் அழைத்து செல்வதில், காலதாமதம் ஏற்பட்டு, சிரமத்துக்கு ஆளாகினர். குடிநீர் வசதியும், போதுமானதாக செய்யப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE