சேலம்: கீரபாப்பம்பாடி ஓட்டுச்சாவடியில், பா.ம.க., - தி.மு.க., நிர்வாகிகள் தாக்கிக்கொண்டனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, கீரபாப்பம்பாடி ஓட்டுச்சாவடியில், பா.ம.க., உறுப்பினர் லட்சுமணன், 25, சால்வையை போட்டுக்கொண்டு ஓட்டுப்போட்டார். தொடர்ந்து, இயந்திரம் அருகே நின்று, கைகளை உயர்த்தியபடி, புகைப்படம் எடுத்தார். இதை, ஓட்டுச்சாவடி அதிகாரி வள்ளிநாயகம் எச்சரித்தார். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த அழகு, பா.ம.க., பிரமுகரை பார்த்து, 'நானும் ஓட்டுச்சாவடியில் படம் எடுப்பேன்' என கூறினார். இதனால், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உதவி கமிஷனர் நாகராஜ், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, இருவரும் தாக்கிக்கொண்ட காட்சிகளை, மொபைல் போனில் வீடியோ எடுத்த அ.தி.மு.க.,வினர், வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.
மண்டை உடைப்பு: ஏற்காடு தொகுதி, கோராத்துப்பட்டியில், அ.தி.மு.க., வார்டு செயலர் சங்கர், 48, தி.மு.க., செயலர் சுப்ரமணி, 49, இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று காலை, தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாலை, சங்கரின் உறவினர் ஜீவமுருகன், 22, சுப்ரமணி உறவினர் செல்லதுரை, 31, ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த செல்லதுரை தலைமையில் நான்கு பேர், ஜீவமுருகனின் மண்டையை அடித்து உடைத்தனர். ரத்த வெள்ளத்தில், அவரை மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE