தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 13 பேர் நேற்று பாதுகாப்பு உடைகளுடன் சென்று ஓட்டளித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய, ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாலக்கோடு தொகுதியை சேர்ந்த, 6 பேர், தர்மபுரி தொகுதியை சேர்ந்த, 3 பேர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளை சேர்ந்த தலா, இருவர் என மொத்தம், 13 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு மேல், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில், ஓட்டளிக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, 13 பேரும் நேற்று ஓட்டளித்தனர்.
* தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய, ஐந்து சட்டசபை தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டளித்தனர். ஓட்டளிக்க வந்த பெரும்பாலானோர் முகக்கவசத்துடன் வந்தனர். மேலும், ஓட்டு மையங்களில் வழங்கப்பட்ட கையுறைகளை அணிந்து கொண்டு, பாதுகாப்பாக ஓட்டளித்தனர். ஓட்டளிக்க வந்தவர்களின், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்பே, ஓட்டுச்சாவடிக்களுக்குள் பொதுமக்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்போட வரும் முதியவர்களை, என்.என்.எஸ்., மாணவர்கள் சக்கர நாற்காலி வண்டியில், அழைத்துச் சென்றனர்.
* திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனாவால் பாதித்து, 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய விரும்பவில்லை என கூறியதால், அவர்கள், யாரும் ஓட்டுப்பதிவு செய்யவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE