கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், அகரம் அடுத்த தளிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, கோவிலூரை சேர்ந்த பெரியசாமி, சுதா, தம்பதியின் மகன் முகிலன், 7; முகிலனின் தந்தை இறந்து விட்டார். தாய் அரவணைப்பில் முகிலன் வளர்ந்து வந்தான். நேற்று மாலை வழக்கம் போல தன் வீட்டருகே உள்ள தென்னந்தோப்பில், விளையாட சென்ற முகிலன், இரவு, 7:00 மணியாகியும் வராததால், தாய் சுதா தேடி சென்றுள்ளார். அங்கு தென்னந்தோப்பில் மின் கம்பியை மிதித்தவாறு, முகிலன் இறந்து கிடந்தது தெரிந்தது. கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது, பல இடங்களில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை, நேற்று காலையில், அவசர கதியில், மின்வாரியத்தினர் இணைப்பு கொடுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட குளறுபடியால், சிறுவன் முகிலன் மின்சாரம் பாய்ந்து பலியானது தெரிந்து, மின்வாரியத்தினரை கண்டித்து, பொதுமக்கள் தளிஹள்ளி கூட்ரோட்டில் இரவு, 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE