ஓசூர்: தளி அருகே, மூதாட்டி சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பல்லேரிப்பள்ளியை சேர்ந்தவர் வீரபத்திராரெட்டி மனைவி அக்கையம்மாள், 75; வயது முதிர்வால், அவரது மகள் ஊரான, நாகசந்திரத்தில் நேற்று காலை உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய, அப்பகுதியை சேர்ந்த மக்கள், ஊரின் ஒதுக்குப்புறத்தில் குழி தோண்டினர். அந்த இடம் பட்டா நிலம் எனக்கூறி, அப்பகுதியை சேர்ந்த ரவிக்குமார், 29, விஜயகுமார், 27, ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஊர்மக்கள் தரப்பில், காலம், காலமாக இப்பகுதியில் தான் அடக்கம் செய்து வருவதாக தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கையம்மாளை அடக்கம் செய்ய தோண்டிய குழிக்குள் இறங்கி அமர்ந்த விஜயகுமார், அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கீதா தலைமையிலான போலீசார் மற்றும் குப்பட்டி வி.ஏ.ஓ., அறிவழகன் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊரிலுள்ள ஏரிக்கரையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாகவும், தற்போது, குழி தோண்டியுள்ள இடம் பட்டா நிலம் என கூறப்படுவதால், மூதாட்டியை அடக்கம் செய்து விட்டு, பேசிக்கொள்ளலாம் என, தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் முதலில் சம்மதிக்கவில்லை. பின், பொதுமக்கள் ஒத்துக்கொண்டதால், ஏரிக்கரையில் மூதாட்டி சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE