நாமக்கல்: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு தொகுதிகளிலும், மக்கள் காலை முதல், ஆர்வத்துடன் வந்து, தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
ஓட்டுப்பதிவையொட்டி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஓட்டுப்போடுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. அதற்காக, சக்கர நாற்காலி, இரண்டு வீதம் வழங்கப்பட்டிருந்தது. இருவருக்கு மேல் வந்தவர்களுக்கு, சக்கர நாற்காலி இல்லாததால், உடன் வந்த உறவினர்கள், உப்பு மூட்டை சுமந்தபடியும், கையில் தூக்கிக் கொண்டும், ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்தனர். மேலும், கல்லூரி மாணவ, மாணவியரும், தங்களது முதல் வாக்கை பதிவு செய்தனர். இது குறித்து, புதுச்சத்திரம் ஒன்றியம், அண்ணாநகரை சேர்ந்த, கல்லூரி மாணவி காயத்ரி, 21, கூறியதாவது: முதல் ஓட்டு என்பதால், பதற்றமாக இருந்தது. ஆனாலும், ஜனநாயக கடமையை ஆற்றியது மகிழ்ச்சி. தமிழக அரசை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் நமக்காக பணியாற்றுகின்றனர். அதனால், நாம் சரியான ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். எல்லோரும் முன் வந்து, ஓட்டுப்போட வேண்டும். இது, நம் ஜனநாயக கடமை. அதை செய்யாமல் இருப்பது தேசத்துரோகத்துக்கு சமம். இவ்வாறு, அவர் கூறினார். அதேபோல், இளம் வாக்காளர்கள், முதியோர் என, அனைவரும், ஆர்வத்துடன் வந்து, தங்கள் ஓட்டுகளை பதிவு செய்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE